Last Updated : 05 Sep, 2021 06:06 PM

 

Published : 05 Sep 2021 06:06 PM
Last Updated : 05 Sep 2021 06:06 PM

தனியார் ரிசார்ட்டில் அரசு நிகழ்ச்சி: புதுச்சேரி ஆளுநர், முதல்வரிடம் புகார்

புதுச்சேரி

தனியார் ஹோட்டல்களில் அரசு நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என்ற மத்திய அரசின் உத்தரவை மீறி ஆர்டிஐ மனுக்களைக் கையாள அதிகாரிகளுக்கு ரூ.3.5 லட்சம் செலவில் தனியார் ரிசார்ட்டில் மூன்று நாள் பயிற்சி நடத்தியது பற்றி ஆர்டிஐ மூலம் கிடைத்த தகவல் மூலம் ஆளுநர், முதல்வருக்கு புகார் தரப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசு நகர மற்றும் கிராம அமைப்புத் துறை சார்பில், அரசுக் கோப்புகளைக் கையாள்வது மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் பெறப்படும் மனுக்களை எந்தெந்த முறைகளில் கையாள்வது என்பது குறித்து 62 அரசு ஊழியர்களுக்குத் தனியார் ரிசார்ட்டில் மூன்று நாள் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

இதுபற்றி ஆளுநர், முதல்வரிடம் புகார் அளித்திருக்கிறார் ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்புத் தலைவர் ரகுபதி.

புகார் குறித்து அவர் கூறியதாவது:

“தனியார் ரிசார்ட்டில் ஆர்டிஐ மனுக்களைக் கையாள அரசு ஊழியர்களுக்குத் தந்த பயிற்சி தொடர்பாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மூலம் தகவல்களாகக் கேட்டதற்கு தனியார் ரிசார்ட்டில் மூன்று நாட்கள் பயிற்சி முகாம் நடத்தப்பட்டதாகவும். இதற்கு ரூ.3,54,639 செலவிடப்பட்டுள்ளதாகவும் தகவல் அளித்துள்ளனர்.

குறிப்பாகப் புதுச்சேரியில் அனைத்து வசதிகளுடன் கூடிய வகையில் அரசு கருத்தரங்குக் கூடங்கள் பல உள்ள நிலையில், இவர்கள் நகரில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் தனியார் ரிசார்ட்டில் இந்த முகாமை நடத்த வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுகிறது. இதனால் அரசு நிதி, அரசு வாகனங்களின் எரிபொருள் செலவு, நேர விரயம் ஆகியவைதான் ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கில் செலவு செய்து அரசு ஊழியர்களுக்குப் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு இருந்தாலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் பட்சத்தில் பெரும்பாலான அதிகாரிகள் தகவலே தருவதில்லை.

உதாரணத்திற்கு 18.03.2021 அன்று விஜிலென்ஸ் சார்பு செயலர் ஆர்டிஐயில் தகவல் தர மறுத்துவிட்டார். அதே தகவலை மத்திய விஜிலென்ஸில் ஆன்லைன் மூலம் ஆர்டிஐயில் விண்ணப்பித்த பிறகு அதே விஜிலென்ஸ் சார்பு செயலர் கடந்த ஜூலை 2-ம் தேதி தகவல் தந்தார். இதன் மூலம் பயிற்சி முகாம் என்ற பெயரில் அரசு அதிகாரிகளை இந்த ரிசார்ட்டுக்கு ஏதோ பிக்னிக்கிற்கு அழைத்துச் சென்று வந்ததுபோல் உள்ளது. பயிற்சி அளித்த அதிகாரிக்கு ரூ.65,850 கட்டணமாகத் தந்துள்ளனர்.

மத்திய அரசு கரோனா தொற்றுத் தடுப்பு செலவினங்களைக் கருத்தில் கொண்டு அரசு நிகழ்ச்சிகளைத் தனியார் ஓட்டல்களில் நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டிருந்த நிலையிலும், இவர்கள் தனியார் பீச் ரிசார்ட்டில் நடத்தியுள்ளது மத்திய அரசின் உத்தரவை அலட்சியம் செய்துள்ளதுபோல் உள்ளது.

எனவே, அரசு கருத்தரங்கக் கூடங்களில் பயிற்சி முகாம் நடத்தாமல் தனியார் சொகுசு ஓட்டலில் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது குறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க ஆளுநர், முதல்வரிடம் புகார் தந்துள்ளேன்".

இவ்வாறு ரகுபதி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x