Published : 05 Sep 2021 05:15 PM
Last Updated : 05 Sep 2021 05:15 PM
தொலை மருத்துவ சேவைகளுக்காக வெளியிடப்பட்ட மருத்துவத் தொலைபேசி எண்கள் ஜிப்மரில் செயல்படவில்லை. கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறால் தொலை மருத்துவ சேவைகள் முழுவதும் நிறுத்தப்பட்டு நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி கோரிமேட்டில் மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு சிறப்பு மருத்துவ நிபுணர்கள், பேராசிரியர்கள், மருத்துவ அதிகாரிகள் என 700 பேரும், செவிலியர்கள் 2,600 பேரும் பணிபுரிகின்றனர். இதுதவிர டெக்னீஷியன்கள், நிரந்தர ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.
புதுவையில் கரோனா 2-வது அலையால் கடந்த ஏப்ரல் 26-ம் தேதி முதல் வெளிப்புற சிகிச்சைப் பிரிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கரோனா தொற்று குறைவால் கடந்த ஜூன் 21-ம் தேதி முதல் மீண்டும் வெளிப்புற சிகிச்சைப் பிரிவு ஜிப்மரில் செயல்படத் தொடங்கியுள்ளது. அதுவும் நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு துறையிலும் அதிகபட்சமாக 25 நோயாளிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்காக ஜிப்மர் தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு முன்பதிவு செய்து, மருத்துவருடன் கலந்தாலோசனை செய்த பிறகுதான் அனுமதி வழங்கப்படுகிறது.
ஜிப்மர் இணையதளத்தில் துறை வாரியாகக் குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்களில், தங்களுடைய பிரச்சினைகளுக்கான எண்ணில், நோயாளிகள் முதலில் தொடர்புகொண்டு பதிவுசெய்ய வேண்டும். பிறகு மருத்துவர்களுடன் தொலை மருத்துவக் கலந்தாலோசனை பெற வேண்டும். அப்போது மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோருக்கு மட்டுமே வெளிப்புற சிகிச்சைப் பிரிவுக்கு வர அனுமதி அளிக்கப்படுகிறது. தற்போது அந்த எண்ணும் செயல்படுவதில்லை என்று புகார்கள் எழுந்தன.
இதுபற்றி ஜிப்மர் தரப்பு வெளியிட்ட தகவலில், "ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள கணினி அமைப்பு பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதால் பல்வேறு துறைகளில் கணினி மூலம் நடைபெறும் சேவைகள் பெருமளவு தடைப்பட்டுள்ளன. மருத்துவமனை தொலை மருத்துவ சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. தொலை மருத்துவ சேவைகளுக்காக வெளியிடப்பட்ட மருத்துவத் தொலைபேசி எண்கள் செயல்படாது. தொலை மருத்துவ சேவை விரைந்து இயல்பு நிலைக்குக் கொண்டுவர முயற்சி எடுக்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT