Last Updated : 05 Sep, 2021 03:48 PM

 

Published : 05 Sep 2021 03:48 PM
Last Updated : 05 Sep 2021 03:48 PM

புதுவையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவத்தை ரங்கோலியாக வரைந்து அசத்திய பெண்

புதுச்சேரி

ஆசிரியர் தினத்தையொட்டி டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவத்தை ரங்கோலியாக வரைந்து புதுச்சேரியைச் சேர்ந்த பெண் மரியாதை செலுத்தினார்.

புதுச்சேரி முருங்கப்பாக்கம் அன்னை தெரசா நகர் பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகி. ஓவியப் பட்டதாரிப் பெண்ணான இவர் தேசத் தலைவர்கள் ஒவ்வொருவரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளின் போதும் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் தனது வீட்டில் உள்ள அறைகள் முழுவதும் பிரம்மாண்டமான முறையில் அவர்களின் உருவங்களை ரங்கோலியால் வரைவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

காந்தி, அப்துல் கலாம், காமராஜர் உள்ளிட்ட தலைவர்களின் உருவங்களை பிரம்மாண்டமாக ரங்கோலியால் வரைந்து அசத்தியுள்ளார். மேலும், அன்னை தெரசா, கிரிக்கெட் வீரர் தோனி, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆகியோரின் சிற்ப ஓவியங்களையும் வடித்து அசத்தி வருகிறார்.

சமீபத்தில் நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்த நீரஜ் சோப்ராவின் உருவத்தை ரங்கோலியில் வரைந்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் ஆசிரியர் தினமான இன்று (செப். 5) குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனனைப் போற்றும் வகையில் அவரது உருவத்தை ரங்கோலியால் வரைந்துள்ளார்.

12 அடி உயரம், 11 அடி அகலத்தில் 7 கிலோ கோலமாவும், 8 வண்ணங்களைப் பயன்படுத்தியும் பிரம்மாண்டமாக ரங்கோலி ஓவியம் வரைந்து மரியாதை செய்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்று தங்கம் வென்றுள்ள வீரர்களின் உருவங்களையும் அவர் வரைந்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்.

இதுகுறித்து அறிவழகி கூறும்போது, ‘‘தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகப் பிறந்த நாள், நினைவு நாளில் அவர்களின் உருவங்களைச் சிற்பமாகவும், ரங்கோலி ஓவியமாகவும் வரைந்து சமர்ப்பிக்கிறேன். தலைவர்களின் சிற்பங்கள், ஓவியங்களை உருவாக்கும்போது ஒருவிதமான மனமகிழ்வைத் தருகிறது.

அதுமட்டுமின்றி ஒலிம்பிக், பாராலிம்பிக் போட்டிகளில் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் வீரர்களுக்கு ரங்கோலி மூலம் வாழ்த்து தெரிவிப்பது ஆனந்தமாக இருக்கிறது. தொடர்ந்து இதனை நான் மேற்கொள்வேன்’’ எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x