Published : 05 Sep 2021 03:43 PM
Last Updated : 05 Sep 2021 03:43 PM

வ.உ.சி. காலத்திலேயே இலவசம் பலபேரை வீழ்த்தி இருக்கிறது: புதுவை ஆளுநர் தமிழிசை பேட்டி

ஓட்டப்பிடாரத்தில் உள்ள வ.உ.சி. நினைவு இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலைக்கு ஆளுநர் தமிழிசை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கோவில்பட்டி

வ.உ.சி.யின் சுதேசி கப்பல் அவரை வாழவைத்தது. ஆனால், ஆங்கிலேயர்கள் கொடுத்த இலவசம் அவரை வீழவைத்தது. எனவே, அந்தக் காலத்திலேயே இலவசம் பலபேரை வீழ்த்தி இருக்கிறது என்பதை தூத்துக்குடி மண் உணர்த்தி உள்ளது என்று தெலங்கானா, புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் 150-வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஓட்டப்பிடாரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள வ.உ.சி. உருவச்சிலைக்கு தெலங்கானா, புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவருடைய வரலாற்றை விளக்கும் புகைப்படங்களைப் பார்வையிட்டார்.

பின்னர் ஆளுநர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"இந்திய நாட்டுக்காகப் போராடிய அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாறுகளையும் இளைஞர்கள் படிக்க வேண்டும். அவர்களுக்கு ரசிகர்களாக இருக்க வேண்டும். அவர்கள் இல்லையென்றால் நாம் இன்று சுதந்திரமாக நடமாட முடியாது. தென்பகுதியான தூத்துக்குடியில் இருந்து கப்பல் விட்டு இந்தியாவுக்கே வழிகாட்டியவர் வ.உ.சி. பழைய கதைகளைப் பேசுவது மட்டுமல்ல, நாம் பின்பற்ற வேண்டும். சுதந்திரப் போராட்ட வீரர்கள் வாழ்ந்த இடங்களைத் தேடிச் சென்று பார்த்து, அவர்கள் குறித்துப் படித்து அறிய வேண்டும். இதைத்தான் பாரத பிரதமர் கூறியுள்ளார்.

வ.உ.சி.யின் சுதேசி கப்பல் அவரை வாழவைத்தது. ஆனால், ஆங்கிலேயர்கள் கொடுத்த இலவசம் அவரை வீழவைத்தது. எனவே, அந்தக் காலத்திலேயே இலவசம் பலபேரை வீழ்த்தி இருக்கிறது என்பதை தூத்துக்குடி மண் உணர்த்தி உள்ளது. அவர் மறைந்து பின்னர் அவரைப் பற்றி நாம் யோசிக்கிறோம். ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில், இந்த மண்ணுக்காகப் பாடுபட்டவர், கடைசிக் காலத்தில் மண்ணெண்ணெய் விற்றுக் கடனாளியானார்.

அந்த நேரத்தில் அவருக்கு உதவிட யாருமில்லை. அதனால் மொழிக்காகவும் நாட்டுப்பற்றுகாக்காகவும், சமூகத்துக்காகவும் பாடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் இருந்தால், அவர் வாழும் காலத்திலேயே அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய நாம் பழகிக்கொள்ள வேண்டும்.

நான் ஆளுநராக உள்ள 2 மாநிலங்களிலும் விநாயகர் சிலையைப் பொது இடங்களிலும் வைப்பதற்கும், விநாயகர் ஊர்வலத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது''.

இவ்வாறு ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.

இதேபோல், வ.உ.சி. பேரவை மாவட்ட நிர்வாகி கல்மேடு சிவலிங்கம் தலைமையில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் வ.உ.சி. நினைவு இல்லத்தில் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து, பஜாரில் உள்ள அவரது மார்பளவு சிலைக்கு பாலாபிஷேகம் செய்தனர்.

இதில், வ.உ.சி. பேரவையைச் சேர்ந்த பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், சைவ வேளாளர் சங்கங்களின் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். அமமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. சிவபெருமாள் தலைமையில் நிர்வாகிகள் வந்து வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x