Last Updated : 05 Sep, 2021 03:16 AM

 

Published : 05 Sep 2021 03:16 AM
Last Updated : 05 Sep 2021 03:16 AM

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 14 ஆண்டுகளில் பட்டப் படிப்பு முடித்த 209 கைதிகள்: 925 பேர் சான்றிதழ் படிப்புகளை முடித்து அசத்தல்

சென்னை

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் மூலமாக கடந்த 14 ஆண்டுகளில் 209 கைதிகள் பட்டப் படிப்பையும், 925 பேர் சான்றிதழ் படிப்புகளையும் முடித்துள்ளனர்.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் 81 பட்டப் படிப்புகள், 21 திறன் மேம்பாட்டுப் படிப்புகள் ஆகிய 130 கல்விசார் பாடவகைப் பிரிவுகளை தொலைதூரக் கல்வி அடிப்படையில் வழங்கி வருகிறது.

குறிப்பாக, சென்னை, கோவை,கடலூர், மதுரை, பாளையங்கோட்டை, புதுக்கோட்டை (மாவட்ட சிறை), சேலம், திருச்சி, வேலூர் ஆகிய 9 மத்திய சிறைச்சாலைகளில் திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் கல்வி மையங்கள் மூலம் கடந்த 2007 முதல் பட்டப் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.

அதேபோல, 9 சிறைகள், 3 பெண்கள் தனிச் சிறைகள் மற்றும் புதுக்கோட்டை பார்ஸ்டல் பள்ளி ஆகியவற்றில், மகாத்மா காந்தி சமுதாயக் கல்லூரி கடந்த 2010-ல்தொடங்கப்பட்டது. இதில் தொழிற்கல்வி, பட்டயப் படிப்புகள் உள்ளிட்டசான்றிதழ் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. இவற்றைப் படிப்பதற்கு எந்த வயது உச்சவரம்பும் கிடையாது.

இந்நிலையில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு வழங்கிய புள்ளிவிவரங்களின்படி, 2007-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டுவரை இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளில் 6 பெண்கள் உட்பட 609 கைதிகள் சேர்ந்துள்ளனர்.

அதிகபட்சமாக திருச்சி மத்தியச் சிறையில் 151 பேரும், அதற்கு அடுத்தபடியாக சென்னை மத்திய சிறையில் 130 பேரும், கடலூர் சிறையில் 116 பேரும், கோவை சிறையில் 77 பேரும் சேர்ந்துள்ளனர்.

அதேபோல, புதுக்கோட்டை சிறையில் இதுவரை 5 பேரும், வேலூரில் 19 பேரும், பாளையங்கோட்டையில் 55 பேரும், மதுரை சிறையில் 56 பேரும் சேர்ந்துள்ளனர்.

அதன்படி, பட்டப் படிப்புகளில் சேர்ந்து படித்த கைதிகளில் இதுவரை எம்பிஏ படிப்பில் 6 பேரும், எம்சிஏ படிப்பில் ஒரு கைதியும் பட்டம் பெற்றுள்ளனர். இதர முதுநிலை பட்டப் படிப்புகளில் 46 பேரும், இளநிலை பட்டப் படிப்புகளில் 4 பெண்கள் உட்பட 156 பேரும் பட்டம் பெற்றுள்ளனர். அதன்படி, மொத்தம் 209 கைதிகள் பட்டதாரிகளாகியுள்ளனர்.

மேலும், மகாத்மா காந்தி சமுதாயக் கல்லூரி மூலமாக 65 பெண்கள் உட்பட 765 பேர் பட்டயப் படிப்புகளையும், 160 ஆண் கைதிகள் தொழிற்பயிற்சி பட்டப்படிப்பையும் சேர்த்து மொத்தம் 925 பேர் சான்றிதழ் படிப்புகளை முடித்து அசத்திஉள்ளனர்.

எனினும், 2017, 2018, 2019 மற்றும் 2020 ஆகிய நான்கு ஆண்டுகளில் சென்னையில் 11 பேர், கோவையில் 11 பேர், மதுரையில் 8 பேர் என மொத்தம் 30 கைதிகள் மட்டுமே பட்டப் படிப்புகளில் சேர்ந்துள்ளனர். ஆனால், 2007-ம் ஆண்டுமுதல் தற்போதுவரை சேலம் சிறையிலிருந்து இதுவரை ஒரு கைதிகூட பட்டப் படிப்பில் சேரவில்லை.

இதுகுறித்து சிறைத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “சிறையில் அன்றாடப் பணிகளைச் செய்து ரூ.150 முதல் ரூ.300 வரை சம்பளம் பெறும் கைதிகளால் பட்டப் படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்புகளைத் தொடருவது கடினமாக உள்ளது. சில கைதிகளுக்கு அவரது உறவினர்கள் வெளியே இருந்து பண உதவி செய்கிறார்கள். அதனால், அவர்களால் படிக்க முடிகிறது. ஆனால், கல்வி மீது ஆர்வமுள்ள சில கைதிகளுக்குக் கட்டணம் செலுத்தி உதவ உறவினர்கள் யாரும் இல்லை. சிறைக் கைதிகளுக்குக் கல்விக் கட்டணம் மிகப்பெரிய தடையாக இருக்கிறது” என்றார்.

இது தொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர் கோ.பார்த்தசாரதி கூறும்போது, "சிறைக் கைதிகளின் மனதை கல்வியின் பக்கம் திருப்பும் நோக்கில் நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில்தான் சிறைகளில் பட்டப் படிப்பு படிக்கும் வசதியை, திறந்தநிலைப் பல்கலைக்கழகம் தொடங்கியது. 50 சதவீத கல்விக் கட்டண தளர்வுகள் கைதிகளுக்கு வழங்கப்படுகிறது.

அதேபோல, கரோனா காலகட்டத்தில் தேர்வுக் கட்டணம் செலுத்தச் சிறைவாசிகள் மிகவும் சிரமம் அடைந்தனர். இதனால், தேர்வுக் கட்டணத்திலிருந்து கைதிகளுக்கு விலக்கு வழங்கப்பட்டது. கைதிகளுக்கு இலவச கல்வி வழங்க சாத்தியம் இருக்கிறதா என்ற கோணத்திலும் நாங்கள் ஆலோசனை செய்துவருகிறோம். சிறையிலிருந்து சலுகைமூலம் கல்வி பயிலும் கைதி, விடுதலையான பின்னரும் அதே சலுகையுடன் தனது படிப்பைத் தொடர முடியும். இது இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத சிறப்பு அம்சமாகும்.

சிறையிலிருந்து பட்டம் அல்லது சான்றிதழ் படிப்பு முடித்து வெளியே வரும்போது, சமுதாயத்தில் அவர்களுக்கென தனி அங்கீகாரம் கிடைக்கும். கல்விக் கட்டணத்துக்கு உதவ பொதுமக்கள் முன்வர வேண்டும்" என்றார்.

14 ஆயிரம் கைதிகள்

2021-ம் ஆண்டு மே மாத புள்ளிவிவரங்களின்படி, தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகளில் 13 ஆயிரத்து 985 ஆண்கள், 611 பெண்கள் என மொத்தம் 14 ஆயிரத்து 596 கைதிகள் உள்ளனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x