Published : 17 Feb 2016 09:13 AM
Last Updated : 17 Feb 2016 09:13 AM
திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகி விட்டதால் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் தங்களது வாரிசுகளைக் கள மிறக்கத் தயாராகிவிட்டனர்.
காங்கிரஸ் மேலிடத் தலைவர்களான குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் ஆகியோர் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து காங்கிரஸ் - திமுக கூட்டணியை உறுதிப்படுத்திய பிறகு காங்கிரஸ் வட்டாரத்தில் புதிய உற்சாகம் பிறந்துள்ளது. தேர்தலில் போட்டியிடுவதா, வேண் டாமா என்று யோசித்துக் கொண்டு இருந்தவர்கள்கூட இப்போது கட்சியில் சீட் பெறுவதற்கு சிபாரிக்கு ஆட்களை தேடிக் கொண்டிருக்கின்றனர். இந் நிலையில், தேர்தலில் தங்களது வாரிசுகளுக்கு சீட் பெறுவதில் காங்கிரஸ் மூத்த தலைவர்களும் முனைப்புக் காட்ட ஆரம்பித்துள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலில் ஐந்துக்கும் அதிகமான வாரிசு வேட்பாளர்கள் காங்கிரஸ் சார்பில் களத்தில் நின்றனர். அதுபோல சட்டமன்றத் தேர்தலில், கட்சி பொருளாளர் நாசே ஜே.ராமச்சந்திரன் தனது மகன் நாசே ராஜேஷை காஞ்சிபுரம் அல்லது திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு தொகுதியில் நிறுத்த முயற்சிப்பதாகச் சொல்லப்படுகிறது. திருப்பூர் அல்லது ஈரோடு மாவட்டத்தில் ஒரு தொகுதியில் தனது மகன் திருமகன் ஈ.வெ.ராவை நிறுத்த தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் சேலம் மாவட்டத்தில், தனது மகன் கார்த்திக்கை நிறுத்த முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலுவும் முயற்சிக்கின்றனர்.
இதுபோலவே, முன்னாள் மத்திய அமைச்சர்களான ப.சிதம்பரம் தனது மகன் கார்த்தி சிதம்பரத்தை காரைக்குடி அல்லது திருமயம் தொகுதியிலும்; சுதர்சன நாச்சியப்பன் எம்.பி., தனது மகன் ஜெய்சிம்மாவை சிவகங்கை தொகுதியிலும்; திருநாவுக்கரசர் தனது மகன் அன்பரசனை அறந்தாங்கி தொகுதியிலும் நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. முன்னாள் எம்.பி-க்கள் கிருஷ்ணசாமி தனது மகன் விஷ்ணு பிரசாத்தை செய்யாறு தொகுதியிலும்; ஜே.எம்.ஆரூண் தனது மகன் அசன் மவுலானாவை ராமநாதபுரம் அல்லது சென்னையில் ஏதாவதொரு தொகுதியிலும்; அன்பரசு தனது மகன் அருள் அன்பரசுவை சோளிங்கர் தொகுதியிலும் நிறுத்த திட்டமிடுவதாக காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இதையடுத்து, ‘எம்.பி-க்கு நான் எம்.எல்.ஏ-வுக்கு நீ’ என்று அப்பா பிள்ளைகள் இடம் பிடித்துக் கொண்டால் மற்றவர்கள் எங்கே போவது? என்று இப்போதே காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்புகளும் கேட்கத் தொடங்கிவிட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT