Published : 04 Sep 2021 06:15 PM
Last Updated : 04 Sep 2021 06:15 PM
பள்ளிகள் திறக்கப்பட்டதால்தான் கரோனா தொற்று பரவியிருக்கிறது என்பது தவறான தகவல் என, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (செப். 04) சென்னை, கிண்டி மடுவின்கரையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நடைபெற்ற மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு மற்றும் குடிநீர் பாதுகாப்பு வாரம் நிகழ்ச்சியைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"பள்ளிகள் திறக்கப்பட்டதால்தான் கரோனா தொற்று பரவியிருக்கிறது என்ற தவறான தகவல் பரவியுள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் அவர்களுக்குத் தொற்று பரவிவிடவில்லை. ஏற்கெனவே அவர்களுக்குத் தொற்று இருந்துள்ளது. பள்ளிகளுக்கு வந்தவுடன் துறையின் அலுவலர்களால் அத்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அரியலூர், கடலூர் போன்ற 4 மாவட்டங்களில் மூன்று ஆசிரியர்களுக்கும், மூன்று மாணவர்களுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டு அவர்களுக்குத் தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எது எப்படி வந்திருந்தாலும், அவை பரவாமல் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கேரளாவோடு தொடர்புடைய கோவை மாவட்டம், அம்மாவட்டம் மட்டுமல்ல கேரளாவோடு தொடர்புடைய 9 மாவட்டங்களின் எல்லையின் வழியாக தமிழகத்துக்குள் வருபவர்களுக்கு ஆர்.டி-பி.சி.ஆர். பரிசோதனை செய்திருக்க வேண்டும். இரண்டு தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டிருந்தால் மட்டுமே தமிழகத்துக்குள் அனுமதி போன்ற தீவிரமான பணிகளைக் கண்காணித்து வருகிறோம்.
இருந்தாலும் கூட சைக்கிளில் வருபவர்கள், நடந்து வருபவர்கள் மூலம் தொற்று எப்படியாவது பரவிவிடுகிறது. கேரள மாநிலத்திலும் மிகச்சிறந்த நடவடிக்கைகளைத் தொற்று பரவாமல் எடுத்து வருகிறார்கள். இருந்தாலும் தொற்றின் வேகம் ஒரு நாளைக்கு 25 ஆயிரம், 30 ஆயிரம் இருந்து வருகிறது.
தமிழக முதல்வர் அறிவுறுத்தலின்படி நேற்றைக்கு மத்திய அரசின் சுகாதாரத் துறை அமைச்சரைச் சந்தித்து கேரளாவோடு தொடர்புடைய 9 மாவட்டங்களில் 100 சதவிகிதம் அளவுக்குத் தடுப்பூசி செலுத்திட வேண்டுமென்று கூடுதலான தடுப்பூசிகளைக் கேட்டிருக்கிறோம். அதற்கு மத்திய அமைச்சரும் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தசைச் சிதைவு நோயினால் தமிழகம் முழுவதும் 6, 7 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்படி பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தாரிடம் ஒரு தவறான தகவல் பரவியுள்ளது. அமெரிக்காவில் இருந்து ரூ.16 கோடிக்கு மருந்து வாங்கிக் கொடுத்தால் இந்நோய் குணமாகிவிடும் என்று. அதுபோல் யாரும் மருந்து வாங்கி சாப்பிட்டு குணமடைந்ததாக செய்தி இல்லை. ஆனாலும், சுகாதாரத்துறை சார்பில் அவர்களுக்கு என்ன மருந்து கொடுக்க வேண்டுமென்று முடிவெடுத்து அவர்கள் செயல்படுத்துவார்கள்.
இந்தியாவிலேயே குழந்தைகளுக்குத் தடுப்பூசிகள் எங்கேயும் செலுத்தப்படவில்லை. நேற்றைக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சரைச் சந்தித்தபோது கல்லூரிகளில் முதலாமாண்டு சேர்கிற மாணவர்கள் 17 முதல் 18 வயதினராக இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்தத் தடுப்பூசியைச் செலுத்தலாமா? 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்தும் ஊசியைச் செலுத்தலாமா? என்று கேட்டோம்.
அதற்கு அவர் சுகாதாரத் துறையின் அலுவலர்களோடு விவாதித்துத் தெரிவிப்பதாக அறிவித்திருக்கிறார். குறிப்பாக மத்திய அரசின் ஐசிஎம்ஆர் வழிகாட்டு நெறிமுறைகளின்படி தொடங்கப்படும்போது நிச்சயமாகத் தடுப்பூசி செலுத்தப்படும்".
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT