Published : 04 Sep 2021 05:17 PM
Last Updated : 04 Sep 2021 05:17 PM
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில், ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை முதல்வர் ரங்கசாமி சந்தித்துப் பேசினார்.
புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 26-ம் தேதி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உரையுடன் தொடங்கியது. அன்றைய தினம் மாலை முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு அறிவிப்புகள், திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதனிடையே சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நேற்று மாலை நிறைவு பெற்றது.
இந்நிலையில் இன்று (செப். 4) புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில், ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை, முதல்வர் ரங்கசாமி சந்தித்துப் பேசினார். சுமார் 30 நிமிடங்கள் வரை இந்தச் சந்திப்பு நடைபெற்றது. அதில் 15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரைத் தொடங்கி வைத்தமைக்காவும், அரசுக்குத் துணைநிலை ஆளுநர் அளித்துவரும் ஒத்துழைப்புக்காகவும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
பின்னர் ஆளுநர் மாளியைில் இருந்து வெளியே வந்த முதல்வர் ரங்கசாமி கூறும்போது, ‘‘மரியாதை நிமிர்த்தமாக ஆளுநரைச் சந்தித்தேன்’’ எனத் தெரிவித்தார்.
இது தொடர்பாகத் துணைநிலை ஆளுநர் தமிழிசை கூறுகையில், ‘‘பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்தவுடன் அதற்கு நன்றி தெரிவித்து முதல்வர் சந்தித்தார். ஏற்கெனவே பல நல்ல திட்டங்கள் குறித்து நானும், முதல்வரும் பேசியிருந்தோம். அதில் பல திட்டங்கள் மக்களுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கிறது.
அதுமட்டுமின்றி 75-வது சுதந்திர தினத்தை விமரிசையாகக் கொண்டாடுவது சம்பந்தமாகவும் பேசினோம். ஆரோக்கியமான, நேர்மறையான, மக்களுக்கு எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு நடைபெற்ற சந்திப்பு என்றுதான் சொல்ல வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT