Published : 04 Sep 2021 01:20 PM
Last Updated : 04 Sep 2021 01:20 PM
மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டத்துக்குத் தயாராக வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (செப். 04) வெளியிட்ட அறிக்கை:
"கடந்த 67 ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட தேசத்தின் சொத்துகள் விற்கப்படுகின்றன. இதன் மூலம், கடந்த 70 ஆண்டுகளாக காங்கிரஸ் (அடல் பிஹாரி வாஜ்பாய் அரசு உட்பட மற்ற அரசுகளும் சேர்த்து) எதையும் செய்யவோ, கட்டமைக்கவோ இல்லை என்று 7 ஆண்டுகளாக நரேந்திர மோடியும் அவரது அமைச்சர்களும் சுமத்திவந்த குற்றச்சாட்டு, பொய் எனத் தற்போது நிரூபணமாகியுள்ளது.
நீண்ட காலமாக இழப்பு ஏற்படும் பொதுத் துறை நிறுவனங்களை மட்டுமே காங்கிரஸ் விற்பனை செய்தது. பாதுகாப்பு, ரயில்வே போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த துறைகளை விற்பதற்கு காங்கிரஸ் ஒருபோதும் முயன்றதில்லை. இந்தத் துறைகளைத் தனியார் ஏகபோகத்துக்கு விட்டால் அது நாட்டின் வளர்ச்சிக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
பண மதிப்பிழப்பு மற்றும் தனியார் மயமாக்கல் ஆகியவற்றுடன், 'பணமாக்குதல்' என்ற எண்ணம் மோடி அரசுக்கு உருவாகியுள்ளது. கடந்த 67 ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட பொதுச் சொத்துகளை, ஒருசில நண்பர்களுக்குத் தாரை வார்க்க மோடி அரசு விரும்புகிறது. விற்கப்படும் சொத்துகள் 30 முதல் 50 ஆண்டுகள் கழித்தே அரசுக்குத் திரும்பி வரும். அப்போது அந்தச் சொத்துகள் மதிப்பிழந்து பூஜ்ஜியமாகிவிடும்.
ஏதாவது ஒரு பெயரைச் சொல்லி 'வாடகை' வசூலிக்கலாம் என்று அரசு நினைக்கிறது. எந்தப் பெயரை வைத்தாலும், தேசியக் கட்டமைப்புக்கான முதலீடாக அது இருக்க வேண்டும். ரூ.1.5 லட்சம் கோடி நிதியைத் திரட்ட, 70 ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களைத்தான் விற்க வேண்டுமா?
நாட்டின் அடிப்படை உள்கட்டமைப்புக்காக ரூ.100 லட்சம் கோடி ஒதுக்கப்படும் என, 3 முறை பிரதமர் மோடி அறிவித்தார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்வதைப் போல், பொதுத்துறை நிறுவனங்களை விற்று 4 ஆண்டுகளில் 6 லட்சம் கோடி ரூபாயை வசூலிப்பதாகவே வைத்துக்கொண்டால், நீங்கள் கூறும் ரூ.100 லட்சம் கோடிக்கான அடிப்படை உள்கட்டமைப்பை இந்த வருவாயிலிருந்து எப்படிச் செலவிட முடியும்?.
அடிப்படைக் கட்டமைப்புக்காக ஒரு செங்கல்லைக் கூட மோடி அரசு எடுத்து வைக்கவில்லை. வாடகை என்ற பெயரில் இவர்கள் வசூலிக்கப்போவது நடப்பு செலவினங்களைச் சமாளிப்பதற்குத்தான். அதில் மீதம் இருந்தால், புல்லட் ரயில் திட்டம், சென்ட்ரல் விஸ்டா, புதிய நாடாளுமன்றக் கட்டிடம், பிரதமருக்குப் புதிய விமானம் வாங்கச் செலவிடப்படும்.
இந்தத் திறமையில்லாத அரசு, பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகளை யாருக்கு வழங்கும் என்று நமக்குத் தெரியும். இந்த நிறுவனங்களை ஏலம் எடுப்பவர்களுக்குப் பொதுத்துறை வங்கிகள் நிதியுதவி அளிக்கும். எனவே, பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகளைத் தனியார் கையகப்படுத்துவதற்கு, பொதுத்துறை வங்கிகளின் பணமே பயன்படுத்தப்படும்.
முதலாவதாக, 30 முதல் 50 ஆண்டு காலத்துக்குப் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்தால், இந்த தேசத்துக்கோ அல்லது எதிர்கால சந்ததியினருக்கோ எந்தப் பலனும் கிடைக்காது. தேசத்துக்கு வரவேண்டிய வருவாய் முற்றிலும் நின்றுபோகும். இரண்டாவதாக, தனியார் வசம் செல்லும் பொதுத்துறை நிறுவனங்களில் ஏழைகள், எஸ்.சி., எஸ்டி., ஓபிசி போன்றோருக்கு வேலைவாய்ப்புகள் பறிபோகும்.
ரூ.1.6 லட்சம் கோடி மதிப்புள்ள 26,700 கி.மீ. தொலைவுக்கான தேசிய நெடுஞ்சாலை, ரூ.1.5 லட்சம் கோடி மதிப்புள்ள 400 ரயில் நிலையங்கள், 150 தனியார் ரயில்கள், ரயில் பாதை மற்றும் சேமிப்புக் கிடங்குகள் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டுள்ளன.
அதோடு, 42,300 சர்க்யூட் கி.மீ. தொலைவுக்கான மின் பாதை, 6 ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட மின் உற்பத்தி, என்ஹெச்பிசி, என்டிபிசி மற்றும் என்எல்சி ஆகியவற்றுக்குச் சொந்தமான சோலார் காற்றாலை சொத்துகளும், கெயில் நிறுவனத்தின் 8 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கான தேசிய கேஸ் பைப்லைனும் தற்போது தனியார் மயமாக்கப்படவுள்ளன.
மேலும், 4 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கான பெட்ரோலிய பைப்லைன்களும், பாரத் நெட் ஃபைபர் நெட்வொர்க், பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் டவர்கள் போன்ற 2.8 லட்சம் கி.மீ. தொலைவுக்கான தொலைத்தொடர்பு சொத்துகளும், 210 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட ரூ.29 ஆயிரம் கோடி மதிப்புள்ள சேமிப்புக் கிடங்குகள், 107 நிலக்கரி சுரங்கங்கள், 761 கனிமவள மண்டலங்கள், ரூ.21 ஆயிரம் கோடி மதிப்புள்ள 25 விமான நிலையங்கள், செயல்படுத்தப்பட்டு வரும் 31 திட்டங்களுடன் சேர்த்து ரூ.13 ஆயிரம் கோடி மதிப்புள்ள துறைமுகங்கள், ரூ.11 ஆயிரம் கோடி மதிப்புள்ள 2 தேசிய ஸ்டேடியங்கள் ஆகியவற்றை சில தொழிலதிபர்களுக்குப் பரிசாகக் கொடுக்க முடிவு செய்துள்ளது நாட்டு மக்களுக்குச் செய்யும் பச்சை துரோகம்.
'என்எம்பி' எனப்படும் 'தேசிய பணமாக்கல் வழி' குறித்த வரைவுத் திட்டம் ஏதும் இல்லை. விற்கப்படும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை நடத்தப்படவில்லை. நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்படவில்லை.
முறைசாரா துறையை ஒழிக்க இந்தியப் பிரதமர் பல்வேறு வழிகளைக் கையாண்டு கொண்டிருக்கிறார். நாட்டில் ஏகபோகங்களை உருவாக்குவது ஆபத்தானது. இதைத்தான் நாம் கிழக்கிந்திய கம்பெனியிடம் பார்த்தோம். ஏகபோகம் மூலம்தான் அவர்கள் நம்மை அடிமைப்படுத்தினார்கள். இப்போதும் அதேபோன்ற அடிமைத்தனத்துக்கு மோடி அரசு அழைத்துச் சென்று கொண்டிருப்பது தேசத்துக்கு எதிரான நடவடிக்கையே.
மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டத்துக்குத் தயாராக வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. நாட்டின் சொத்துகளை விற்பதைத் தடுக்க அனைத்துக் கட்சிகளும், மக்களும் ஓரணியில் திரள வேண்டும்".
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT