Last Updated : 04 Sep, 2021 12:55 PM

 

Published : 04 Sep 2021 12:55 PM
Last Updated : 04 Sep 2021 12:55 PM

கோவை மாவட்டத்தில் சனி, ஞாயிறுகளில் மளிகைக் கடைகள் இயங்க அனுமதி: ஆட்சியர் உத்தரவு

கோவை

வர்த்தகர்களின் கோரிக்கையைத் தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் சனி, ஞாயிறுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பகுதிகளில் மளிகைக் கடைகள் இயங்க மாவட்ட ஆட்சியர் அனுமதித்து உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள வர்த்தகப் பகுதிகளில் சனி, ஞாயிறுகளில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இப்பகுதிகளில் பால், மருந்து, காய்கறிக் கடைகள் ஆகியவற்றைத் தவிர, மற்ற கடைகள் சனி, ஞாயிறுகளில் திறக்கத் தடை விதிக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில், மாவட்டத்தைச் சேர்ந்த உணவக உரிமையாளர்கள், பேக்கரி உரிமையாளர்கள், வணிகர் சங்கங்களின் பிரதிநிதிகள் சனி, ஞாயிறுகளில் தங்களது வியாபாரத்துக்குத் தளர்வுகள் அளிக்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்து வலியுறுத்தி இருந்தனர்.

இதைத் தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் இன்று (செப். 04) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"கிராஸ் கட் சாலை, 100 அடி சாலை, ஒப்பணக்கார வீதி, ராமமூர்த்தி சாலை, சாரமேடு சாலை, ரைஸ் மில் சாலை, என்.பி.இட்டேரி சாலை, சிங்காநல்லூர் சிக்னல் முதல் ஒண்டிப்புதூர் வரை, ஹோப்காலேஜ் சிக்னல் கடைகள், காளப்பட்டி சாலை, டி.பி.ரோடு, திருவேங்கடசாமி ரோடு, என்.எஸ்.ஆர்.ரோடு, ஆரோக்கியசாமி ரோடு கிழக்கு, மேற்கு கடைகள், சரவணம்பட்டி சந்திப்பு, கணபதி பேருந்து நிலைய சந்திப்பு, துடியலூர் சந்திப்பு மார்க்கெட் கடைகள், பீளமேடு ரொட்டிக்கடை மைதானக் கடைகள், காந்தி மாநகர் சந்திப்பு, ஆவாரம்பாளையம் சந்திப்பு, பாரதி நகர், பாப்பநாயக்கன்பாளையம், ராஜவீதி, பெரியகடை வீதி, வெரைட்டிஹால் ரோடு, என்.ஹெச்.ரோடு, இடையர் வீதி, வைசியாள் வீதி, தாமஸ் வீதி, சுக்கிரவார்பேட்டை வீதி, மரக்கடை வீதி, ரங்கே கவுடர் வீதி, காந்திபுரம் ஒன்று முதல் 11 வரையிலான தெருக்கள், சலீவன் வீதி ஆகிய இடங்களில் அத்தியாவசியக் கடைகளான பால், மருந்தகம், காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள் (பல்பொருள் அங்காடிகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகள் நீங்கலாக) ஆகியவை சனி மற்றும் ஞாயிறுகளில் இயங்க அனுமதிக்கப்படுகிறது. மேற்கண்ட தெருக்களில் உள்ள இதர கடைகளுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட தடை தொடரும்.

மாவட்டத்தில் செயல்படும் அனைத்து உணவகங்கள், பேக்கரிகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. மேலும், 6 மணி முதல் இரவு 10 மணி வரை மேற்கண்ட இடங்களில் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. மாவட்டத்தில் செயல்படும் அனைத்துக் கடைகளும் கட்டாயம் அரசு வெளியிட்டுள்ள கரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்".

இவ்வாறு ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x