Published : 04 Sep 2021 11:33 AM
Last Updated : 04 Sep 2021 11:33 AM
தமிழில் சிறந்த சிறுவர் இலக்கியத்திற்கான ’பால சாகித்ய புரஸ்கார் விருது’ எழுத்தாளர் யெஸ்.பாலபாரதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஆண்டுதோறும் பல்வேறு மொழிகளில் வெளியாகும் கதை, கவிதை, கட்டுரை உள்ளிட்ட சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு, சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சிறார் இலக்கியப் படைப்புகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
யெஸ்.பாலபாரதி தமிழகத்தின் பல்வேறு ஊடகங்களில் பணியாற்றியவர். தொடர்ந்து சிறார் இலக்கியப் பங்களிப்புகளில் ஈடுபட்டு வருபவர். பாலபாரதி எழுதிய 'மரப்பாச்சி சொன்ன ரகசியம்' என்ற சிறார் இலக்கிய நூலுக்கு 2020ஆம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் வாழ்த்து
பாலபாரதிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள தனது வாழ்த்துச் செய்தியில், '' 'மரப்பாச்சி சொன்ன ரகசியம்' என்ற புதினப் படைப்புக்காக, தமிழில் சிறந்த சிறுவர் இலக்கியத்திற்கான ‘பால சாகித்ய புரஸ்கார்’ விருதைப் பெற்றிருக்கும் எழுத்தாளர் யெஸ்.பாலபாரதியை நெஞ்சார வாழ்த்துகிறேன்! மேலும் பல படைப்புகளைத் தமிழுக்கு வழங்கி புதிய உயரங்களைத் தொடட்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
மரப்பாச்சி சொன்ன ரகசியம் கதை
யெஸ்.பாலபாரதி எழுதிய ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ என்ற சிறார் நாவல் வெறும் தகவல் தொகுப்பாக இல்லாமல் கதையம்சத்துடன் பிரச்சினையைப் பேசுகிறது. குழந்தைகள் பாலியல் சித்திரவதை தொடர்பாகச் சுற்றி வளைக்காமல் நேரடியாக இந்தக் கதையில் ஆசிரியர் பேசியிருக்கிறார்.
பூஜா என்ற மாணவியை அவர்களது வீட்டுத்தரைதளத்தில் வசிக்கும் பெரியவர் பாலியல் சித்திரவதை செய்கிறார். இதனால் உளவியல்ரீதியில் பூஜா பாதிக்கப்படுகிறாள். ஆனால், வழக்கம்போல் பெரியவரின் மிரட்டலால் அதை வெளியில் சொல்லப் பயப்படுகிறாள். இதனால் குழப்பமான மனநிலைக்கு உள்ளாகிறாள். இதிலிருந்து அவள் எப்படி விடுபடுகிறாள் என்பதே கதை.
குழந்தைகள் மீது பெற்றோர் எப்படி அக்கறை செலுத்த வேண்டும் என்பதையும் அவர்களுடன் கலந்துரையாட வேண்டியதன் - துணிச்சலாகவும் வெளிப்படையாகவும் அவர்களைப் பேசவைக்க உந்துதலாக இருக்க வேண்டியதன் - அவசியத்தைப் புரிந்துகொள்ள இந்த நாவல் உதவுகிறது. அதேநேரம் இந்தப் பிரச்சினையிலிருந்து மீளும் முறைகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
குழந்தை பாலியல் சித்திரவதைதான் கதையின் மையம் என்றாலும், இன்றைக்கு நம் குழந்தைகளை ஆக்கிரமித்துள்ள வேறு பல முக்கிய பிரச்சினைகளையும் கதை தொட்டுச் செல்கிறது. மறந்துபோன விளையாட்டுகள், நடனங்கள், பார்வைக் குறைபாடு, ‘குட் டச், பேட் டச்’ எனப் பல்வேறு விஷயங்கள் தொடர்பான கூடுதல் தகவல்களும் வாசிப்புக்குக் கூடுதல் அர்த்தம் சேர்க்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT