Published : 03 Sep 2021 10:28 PM
Last Updated : 03 Sep 2021 10:28 PM

பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை மறுபரிசீலனை செய்யவும்: பிரதமருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்

பொதுத்துறை நிறுவன சொத்துக்களை தனியார்மயமாக்குவதை மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், "நம் நாட்டினுடைய பொதுத்துறை நிறுவனங்கள், நம் அனைவருடைய பொதுச்சொத்தாகும். அவற்றில் பலவும் இந்தியாவைத் தொழில்மயமான, தற்சார்புடைய நாடாக நிலைநிறுத்துவதில் முக்கியப் பங்கு வகிப்பவை. அத்தகைய பொதுத்துறை நிறுவனங்களை அமைப்பதற்கு, மாநிலங்களுக்குச் சொந்தமான அரசு நிலங்களோடு மக்களின் நிலங்களும் வழங்கப்பட்டுள்ளன. அதனால், அந்நிறுவனங்களின் மீது மக்களுக்குப் பெருமையும் உரிமையும் உள்ளது.

மேலும், இந்தப் பணமாக்கல் என்னும் நடவடிக்கை, நாட்டின் பொருளாதாரத்தின் மீதும்,தொடர்புடைய நிறுவனங்களின் பணியாளர்கள் மீதும், இந்நிறுவனங்களைச் சார்ந்து இயங்கும் சிறு-குறு தொழில்துறை மீதும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் தெரியவில்லை.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையை வைத்துப் பார்க்கும்போது, இவ்வளவு பெரிய அளவிலான தனியார்மயமாக்கல் நடவடிக்கையை, எந்தப் பெயரிட்டு அழைத்தாலும், அது விலைமதிப்பற்ற அரசுச் சொத்துகள் ஒருசில குழுக்கள் அல்லது பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் செல்வதற்கே வழிவகுக்கும்.

எனவே, மத்திய அரசினுடைய பொதுச்சொத்துக்களைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்யுமாறும், மேலும், இந்நிறுவனங்களுடன் தொடர்புடையவர்களுடனும் மாநில அரசுகளுடனும் கலந்தாலோசித்த பின்னரே இதுபோன்ற பெரிய முடிவுகளை மத்திய அரசு எடுக்கவேண்டும்" என்று முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x