Last Updated : 02 Sep, 2021 11:03 PM

 

Published : 02 Sep 2021 11:03 PM
Last Updated : 02 Sep 2021 11:03 PM

ஐந்து முகவரிகள்; 117 வாகனங்கள்: குறைந்த வரியைப் பயன்படுத்தி ரூ.20.49 கோடி மதிப்புள்ள வாகனங்கள் பதிவு- புதுச்சேரிக்கு பலகோடி ரூபாய் இழப்பு

புதுச்சேரி

புதுச்சேரியில் குறைந்த வரியை பயன்படுத்தி ரூ.20.49 கோடி மதிப்புள்ள 117 வாகனங்கள் பதிவால் அம்மாநிலங்களுக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை தலைவர் அறிக்கை சட்டப்பேரவையில் இன்று சமர்பிக்கப்பட்டது.

போக்குவரத்துதுறை தொடர்பான தணிக்கை அறிக்கை விவரம்:

"இந்திய கணக்காய்வு தணிக்கையின்போது, புதுச்சேரியில் ஒரே முகவரியில் ஏராளமான வாகனங்கள் பதிவாகியிருந்தன. கடந்த 2016-17 முதல் 2018-2019 வரை 11,454 வாகனங்கள் பிறமாநிலங்களில் நிரந்தர முகவரி உள்ள நபர்களால் பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது. பதிவை ஆராய்ந்ததில் வெவ்வேறு வாகன உரிமையாளர்கள் பிரமாண பத்திரங்கள் மூலம் ஒரே முகவரியை தெரிவித்திருந்தது கண்டறியப்பட்டது.

ஒரே முகவரியை பல வாகன உரிமையாளர்கள் திரும்பத் திரும்ப தெரிவித்ததையும் தணிக்கைத்துறை கண்டறிந்தது. இந்த மூன்று வருட காலத்தில் மிக அதிக மதிப்புக்கொண்ட117 வாகனப் பதிவுகள் வெறும் ஐந்து முகவரிகளிலேயே பதிவாகி இருந்தது. இவர்களின் சொந்த மாநிலங்களில் வாகன வரி விகிதங்கள் அதிகமாய் இருந்ததாலும் புதுச்சேரியில் குறைவாய் இருந்ததாலும் புதுச்சேரியில் வாகனப் பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக பல கோடிமதிப்புள்ள 117 வாகனங்களை பதிவு செய்த உரிமையாளர்கள், புதுச்சேரியில் குறைவான வரிவிதிப்பை பயன்படுத்தி தற்காலிக நடப்பு முகவரியை தெரிவிக்கலாம் என்ற விதியை பயன்படுத்தி உள்ளனர்.

ரூ.40 லட்சம் மட்டுமே வரி செலுத்தி வாகனப்பதிவு செய்துள்ளனர். சொந்த மாநிலங்களில் ரூ. 20.49 கோடி மதிப்புள்ள வாகனங்களை இவர்கள் பதிவு செய்திருந்தால் ரூ. 2.48 கோடி வரியாக செலுத்த வேண்டியிருக்கும்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபற்றி போக்குவரத்துதுறை மற்றும் போலீஸ் தரப்பில் விசாரித்தபோது, " போக்குவரத்துத்துறையினர் முகவரி உண்மை தன்மையை ஒப்பிட்டு பார்ப்பதில்லை. பல வாகனங்கள் ஒரே முகவரியை தந்து வாகனப்பதிவு நடந்துள்ளது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக போக்குவரத்துறை உயர் அதிகாரிகள் தணிக்கைத்துறையிடம் தெரிவித்துள்ளனர்.

வெளிமாநிலங்களைச் சேர்ந்த நடிகர்கள், பிரபல தொழிலதிபர்கள் தங்கள் கார்களை புதுச்சேரியில் பதிவு செய்து வந்தனர். இதனால் அந்த மாநிலங்களுக்கு வரிவருவாய் இழப்பு ஏற்படுவதாக புகார்கள் எழுந்து போலீஸ் விசாரணை வழக்குப்பதிவு வரை சென்றது. குறிப்பாக கேரளத்திலிருந்து நடிகர், நடிகைகள், விஐபிக்கள் இதுபோல் அதிகளவில் ஈடுபட்டனர்.

பல கோடி இதனால் அந்த மாநிலங்களுக்கு இழப்பு ஏற்பட்டது தணிக்கை அறிக்கையில் உறுதியாகியுள்ளது. தற்போது வாகன வரி உயர்ந்துள்ளதால் உயர்ரக வாகனங்கள் பதிவு தற்போது அதிகளவில் இல்லை " என்று குறிப்பிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x