Published : 02 Sep 2021 06:59 PM
Last Updated : 02 Sep 2021 06:59 PM
புதுச்சேரி மொத்தக் கடன் ரூ.9,449 கோடியில் 72 சதவீதத்தை 7 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டிய சூழல் உள்ளதாக கணக்கு தணிக்கைக் குழு தெரிவித்துள்ளது.
இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவர் தனது தணிக்கை அறிக்கையை சட்டப்பேரவையில் நேற்று சமர்ப்பித்தார்.
மார்ச் 2020-ம் ஆண்டுடன் முடிவடைந்த ஆண்டுக்கான நிதி நிலை மீதான தணிக்கை அறிக்கையில் நிதி தொடர்பான முக்கிய அம்சங்கள் விவரம்:
''புதுச்சேரியில் கடந்த 2015-16ல் ரூ.7,754 கோடியாக இருந்த நிலுவைக் கடன்கள் 2019-2020ல் ரூ.9,449 கோடியாக அதிகரித்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.1,695 கோடி அதிகரித்துள்ளது. மொத்தக் கடனில் 72.51 சதவீதத்தை அடுத்த ஏழு ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்தப்பட வேண்டிய நிலை புதுச்சேரி அரசுக்கு உள்ளது.
பணம் பெற்று வழங்கும் பல்வேறு அதிகாரிகளால் பெறப்பட்ட ரூ.114.62 கோடிக்கான தற்காலிக முன்பணம் சரிகட்டப்படாமல் இருந்தது. அத்துடன் ரூ.15.75 கோடிக்கான தற்காலிக முன்பணம் பத்து ஆண்டுகளுக்கு மேலாக சரிகட்டப்படாமல் இருந்தது. கடந்த மார்ச் 2020 வரை, பல்வேறு அரசுத் துறைகளில் ரூ. 27.88 கோடிக்கு அரசுப் பணம் முறைகேடு, திருட்டு மற்றும் பணக்கையாடல்கள் செய்யப்பட்டுள்ளன.
ஆறு பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.28.05 கோடி லாபத்தையும், ஆறு பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.52.37 கோடி நஷ்டத்தையும் அடைந்தன. 12 அரசு நிறுவனங்களில் கணக்குகள் இறுதி செய்யப்படாமல் இருந்தன''.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT