Published : 02 Sep 2021 03:45 PM
Last Updated : 02 Sep 2021 03:45 PM
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரனுக்கு 2 மாதம் பரோல் வழங்கும் மனுவை தமிழக உள்துறைச் செயலர் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மதுரை மத்தியச் சிறையில் 28 ஆண்டுகளாக ஆயுள் தண்டனைக் கைதியாக உள்ளார். ரவிச்சந்திரனை பரோலில் விடுதலை செய்யக்கோரி அவரது தாயார் ராஜேஸ்வரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், ''முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ரவிச்சந்திரன், பேரறிவாளன், நளினி, முருகன் உட்பட 7 பேர் 28 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்கள் 7 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி தமிழக அமைச்சரவையில் 2018 செப்டம்பர் 9-ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானம் தற்போது குடியரசுத் தலைவர் முன்பு உள்ளது.
என் கண்ணில் 2019 ஆகஸ்ட் 2-ல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. என்னை உடனிருந்து கவனிப்பதற்காக ரவிச்சந்திரனை வெளியில் விட 2 முறை மனு அளித்தேன். இரு மனுக்களையும் சிறை அதிகாரிகள் நிராகரித்துவிட்டனர். எனது மற்றொரு கண்ணில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால் என்னைக் கவனிப்பதற்காக ரவிச்சந்திரனுக்கு 2 மாதம் பரோல் விடுமுறை வழங்கக் கோரி இந்த ஆண்டு ஜூன் 26-ம் தேதி சிறைத்துறை அதிகாரியிடம் மனு அளித்தேன். என் மனுவைப் பரிசீலித்து ரவிச்சந்திரனை 2 மாத பரோலில் விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்'' என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் பாரதிதாசன், நிஷாபானு அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் திருமுருகன் வாதிட்டார்.
பின்னர், மனுதாரரின் மனுவை முன்னுரிமை அடிப்படையில் தமிழக உள்துறைச் செயலர் சட்டப்படி பரிசீலித்து 6 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT