Published : 02 Sep 2021 01:09 PM
Last Updated : 02 Sep 2021 01:09 PM
திமுக சின்னத்தில் வெற்றி பெற்ற கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்களை எப்படி அமரவைக்க வேண்டுமென்பது சபாநாயகரின் அதிகாரத்துக்கு உட்பட்டதால், அந்த லட்சுமண ரேகையைத் தாண்ட முடியாது எனக் கூறியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், அது தொடர்பான வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சிகளைச் சேர்ந்த சின்னப்பா, பூமிநாதன், சதன் திருமலை குமார், ரகுராமன், அப்துல் சமது, ஜவாஹிருல்லா, ஈஸ்வரன், வேல்முருகன் ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.
திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்த எட்டு எம்எல்ஏக்களையும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்களாகக் கருதக் கூடாது என உத்தரவிடக் கோரி, கோவையைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 8 எம்எல்ஏக்களையும் எப்படி எதிர்க்கட்சி எம்எல்ஏக்களாகக் கருத முடியும் என்றும், இது ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கும் செயல் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், சட்டப்பேரவையில் பிரதிநிதித்துவம் இல்லாத கட்சிகளைச் சட்டப்பேரவை அனைத்துக் கட்சிக் கூட்டங்களுக்கு அழைக்கக் கூடாது எனவும், இந்த எம்எல்ஏக்களை எதிர்க்கட்சி எம்எல்ஏக்களாகக் கருதி, சட்டப்பேரவையில் தனி இருக்கை வழங்கக் கூடாது எனவும், சட்டப்பேரவையில் பேச தனியாக நேரம் ஒதுக்கக் கூடாது எனவும், மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று (செப். 02) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பேரவை உறுப்பினர்களை எங்கு அமரவைக்க வேண்டும், எவ்வாறு பேச அனுமதிக்க வேண்டும் என்பவை சபாநாயகரின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்றும், இதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டனர். சபாநாயகரின் அதிகாரத்தில் தலையிடும் வகையில், லட்சுமண ரேகை தாண்டப்படக் கூடாது என்றும், வழக்கில் எந்தப் பொது நலனும் இல்லை என்றும் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT