Published : 01 Jun 2014 01:20 PM
Last Updated : 01 Jun 2014 01:20 PM
ராமேஸ்வரத்தில் இன்று முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் தனது அண்ணன் மகளின் இரண்டு புத்தகங்களை வெளியிட்டார்.
ராமேஸ்வரத்திலுள்ள அப்துல் கலாமின் பூர்விக வீட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தனது அண்ணன் முத்து மீரா லெப்பை மரைக்காயரின் மகள் நசிமா மரைக்காயர் எழுதிய ''ஆல விருட்சகம்'' மற்றும் ''திருக்குர்ஆன் அறிவியல் கூறுகள்'' என்ற இரு நூல்களை வெளியிட்டு தனது குடும்பத்தினருடன் மலரும் நினைவுகளை நினைவு கூர்ந்தார்.
அப்துல் கலாம் பேசும்போது, ''இன்று 98 எட்டாம் வயதில் அடி எடுத்து வைக்கும் எனது அண்ணன் இன்னும் பல ஆண்டுகள் எல்லா வளமும் பெற்று வாழ்வதற்கு இறைவனிடம் பிரார்தனை செய்கின்றேன்.
நான் என் சிறுவயதிலிருந்து இந்த பூர்வீக வீட்டில் என் அண்ணனுடன் சேர்ந்து வாழ்ந்திருக்கின்றேன். முன்பு வீட்டின் முகப்பில் இரண்டு திண்ணைகள் இருக்கும். நான் பள்ளி விட்டு திரும்பியதும் ஒரு திண்ணையில் அசதியாக உறங்கினால் எனக்கு காவலாக என் அண்ணன் மற்றொரு திண்ணையில் படுத்துக்கொள்வார். அதேபோல் அநேக முறை அவரிடம் அடியும் வாங்கியிருக்கின்றேன். அவரிடம் அடி வாங்கியதால் தான் இன்று ஆளாகியிருக்கின்றேன்.
முன்பு இந்த வீட்டில் முற்றம் இருந்தது அந்த முற்றத்தில் ஒரே நேரத்தில் மூன்று தொட்டில்கள் ஆடும். அதில் இரு அண்ணன்களின் குழந்தையும், ஒரு அக்காவினுடைய குழந்தையும் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இன்று அவர்கள் எல்லாரும் வளர்ந்து பெரியவர்களாக இங்கு கூடியிருக்கிறார்கள். இவ்வாறு தலைமுறை தலைமுறையா வாழ்ந்த வீட்டில் கூடியிருக்கின்றோம். அதுபோல எனது அண்ணன் போன்று நீண்ட ஆயுளுடன் அனைவரும் வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்" என்றார்.
கலாமின் இந்த திடீர் ராமேஸ்வரம் வருகை அவரது குடும்பத்தினரை மட்டுமின்றி உள்ளுர் மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT