Published : 02 Sep 2021 03:13 AM
Last Updated : 02 Sep 2021 03:13 AM
கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களிடம் இருந்து பெறப்படும் வைப்புநிதியில் வருமான வரி சட்டம்முறையாக பின்பற்றப்படுவதுஇல்லை; இதனால் பல்வேறு நிதி முறைகேடுகள் நடக்கின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் 4,526 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 23 மத்திய கூட்டுறவு வங்கிகள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே சந்தியமங்கலம் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் நிரந்தர வைப்பு நிதி என்ற பெயரில் ரசீது வழங்கி, சுமார் ரூ.4 கோடி வரை மோசடி நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியானது. இச்சங்கத்தில் உறுப்பினராக உள்ள மருத்துவர் ஒருவர் மட்டுமே ரூ.1 கோடிக்கு மேல் நிரந்தர வைப்பில் பணம் செலுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து துறைரீதியான விசாரணை நடந்து வருகிறது. வணிக குற்றப் புலனாய்வு போலீஸார் விசாரிக்கின்றனர்.
இதுகுறித்து விழுப்புரம் மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண் இயக்குநர் பாலகிருஷ்ணனிடம் கேட்டபோது, “வருமானவரி சட்டப்படி தனி நபர் உச்சவரம்பு, வருமான வரி தாக்கல், போன்ற நடைமுறைகள் கூட்டுறவு சங்கங்களில் பின்பற்றப்படுகின்றன” என்றார்.
இப்பிரச்சினையைத் தொடர்ந்து, கூட்டுறவு சங்கங்களில் எவ்வளவு தொகை வைப்பு நிதி பெறலாம் என்ற சர்ச்சை நிலவுகிறது. இதுதொடர்பாக கூட்டுறவுத் துறைச் சார்ந்த வல்லுநர்களிடம் கேட்டபோது அவர்கள் தெரிவித்த விவரம்வருமாறு:
வருமான வரிச் சட்டத்தின்படி ஒருதனி நபர் ரூ.5 லட்சத்துக்கு மேல் வைப்பு நிதி முதலீடு செய்ய முடியாது. ஒரு நபர் ரூ.5 லட்சத்துக்குமேல் டெபாசிட் செய்தால் உடனடியாக வருமான வரி அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால் எந்த ஒரு கூட்டுறவுவேளாண் கடன் வழங்கும் சங்கமும் இதைச் செய்வதில்லை. இன்னும் சில சங்கங்களில் இந்தவிதியை புறந்தள்ளி, ரூ.1 கோடிக்கும் மேலாக வைப்பு நிதியை பெற்றுள்ளனர். மாநிலப் பதிவாளர்ஆணையில் குறிப்பிட்டுள்ளவாறு வட்டி விகிதத்தையும் கடைபிடிப்பதில்லை. தன்னிச்சையாக வட்டியைஉயர்த்தி மக்களிடம் இருந்து வைப்பு நிதியைப் பெற்றுள்ளனர்.
வழக்குகள் பாயும் நிலை
வைப்பு நிதி முதலீடு செய்வோரிடம் இருந்து டிடிஎஸ் பிடித்தம் செய்யப்பட வேண்டும். அல்லது உரிய படிவத்தைப் பெற்று சங்கத்தில் பராமரிக்கப்பட வேண்டும். இதையும் எந்த சங்கமும் செய்வதில்லை. மேற்படி படிவங்களை வாங்கி பராமரித்தாலும், ஆண்டுக்கு ஆண்டு வருமான வரித் தாக்கல் செய்து சங்கத்தில் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். இதை எதையும் கூட்டுறவுசங்கங்கள் கண்காணிப்பது இல்லை. இதனால் எதிர்காலத்தில் கூட்டுறவு சங்கங்களின் மீதுவருமானவரி வழக்குகள் பாயும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
வருமான வரியை ஏய்க்கும் மனநிலையில் உள்ளவர்கள் இதன்காரணமாகவே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களையும், பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்களையும் அணுகி அதிக முதலீடு செய்கிறார்கள். தனி நபர் உச்சவரம்பு, வருமான வரித் தாக்கல் போன்ற நடைமுறைகளை கூட்டுறவு சங்கங்கள் பின்பற்றுகின்றனவா என்பதை உடனடியாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் வட்டியாக ரூ.40 ஆயிரம் பெறும் வாடிக்கையாளர்களிடம் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படுகிறது.
ஆனால் தொடக்கக் கூட்டுறவுசங்கங்களில் வருமான வரி தொடர்பாக எவ்வித ஆவணங்களும் பராமரிக்கப்படுவது இல்லை என்பதுதான் தற்போதைய நிலை என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT