Published : 01 Sep 2021 06:58 PM
Last Updated : 01 Sep 2021 06:58 PM
பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டுக் கழகம் மூலம் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்என புதுச்சேரி முதல்வர் ரங்கச்சாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புதுச்சேரி சட்டப் பேரவையில் இன்று (செப். 1) பட்ஜெட் மீதான விவாதத்தின் இறுதியில் முதல்வர் ரங்கசாமி பதிலளித்துப் பேசியதாவது,
”புதுச்சேரியில் கடந்த கால ஆட்சியில் நிர்வாகச் சீர்கேடு எவ்வாறு இருந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். நல்லாட்சி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் தேர்தலைச் சந்தித்து தே.ஜ. கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ளது.
தே.ஜ. கூட்டணி அரசு நல்லாட்சி புரியும். அதற்கு பிரதமரும், மத்திய அரசும் தேவையானதைச் செய்வார்கள். மத்திய அரசு இந்த ஆண்டு பட்ஜெட்டில் 1.5 சதவீதம் கூடுதலாக நிதி அளித்துள்ளது. கடந்த ஜனவரி மாதமே பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்தது. மே மாதம்தான் நாம் ஆட்சிக்கு வந்தோம்.
இதனால், உடனடியாக கூடுதல் நிதி தரவில்லை. அடுத்ததாக மத்திய அரசு கூடுதல் நிதி தரும் என்ற நம்பிக்கை உள்ளது. பிரதமரிடம் கூடுதலாக ரூ.500 கோடி நிதி கேட்டுள்ளோம். மீண்டும் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளோம். நிச்சயமாக அந்த நிதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுள்ளது.
மத்திய அரசும் நமக்கு ஒத்துழைப்பு அளிக்கிறது. மாநில அந்தஸ்து கோரிக்கை எப்போதும் தொடரும். நீண்டகால முதல்வர் என்ற அனுபவத்தில், மாநில அந்தஸ்து இல்லாமலிருப்பது எவ்வளவு கடினம் என்பது எனக்குத் தெரியும். இது தொடர்பாக பிரதமரிடம் கேட்டுள்ளேன்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. நிச்சயம் மாநில அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இது தொடர்பாக மீண்டும் ஒருமுறை தீர்மானமும் நிறைவேற்றப்படும்.
விவசாயிகளுக்கு உறுதுணையாக இருந்த பாசிக், பாப்ஸ்கோ போன்ற நிறுவனங்கள் மீண்டும் சிறப்பாக இயங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்நிறுவனங்களுக்கு 33 மதுக்கூடங்கள், 5 பெட்ரோல் நிலையங்கள் போன்றவை இருந்தும் எப்படி நலிவடைந்தது? எனத் தெரியவில்லை. அவற்றை மீண்டும் உயிரூட்டிக் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்கும். புதுச்சேரியில் விற்கப்பட்ட வீட்டு மனைகள், மனை வணிகம் ஒழுங்குபடுத்தப்படும்.
தியாகிகளுக்கான ஓய்வூதியம் தற்போதுள்ள ரூ.9 ஆயிரத்திலிருந்து, ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும். ஆதிதிராவிடர் நல (பாட்கோ) கல்விக் கடனைத் தள்ளுபடி செய்துள்ளோம். அதேபோல், பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டுக் கழகம் மூலம் பெற்ற கல்விக் கடனும் தள்ளுபடி செய்யப்படும்” என்று அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT