Published : 01 Sep 2021 03:43 PM
Last Updated : 01 Sep 2021 03:43 PM

கருணாநிதிக்கு அண்ணா சாலையில் மீண்டும் சிலை: பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உறுதி

முதல்வர் ஸ்டாலின்: கோப்புப்படம்

சென்னை

கருணாநிதிக்கு அண்ணா சாலையில் மீண்டும் சிலை வைக்கப்படும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி திருவுருவச் சிலையை அண்ணா சாலையில் அமைப்பது குறித்து, திமுக சட்டப்பேரவை உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம் இன்று (செப். 01) சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தார்.

அதற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில்:

"பெரியார் எண்ணிய எண்ணத்தை நிறைவேற்றும் வகையில், திராவிடர் கழகத்தின் சார்பில், சென்னை, அண்ணா சாலையிலே, தலைவர் கருணாநிதியுடைய திருவுருவச் சிலையை அமைக்க வேண்டுமென்று, அதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு, அதற்காக முறையாக அனுமதியும் பெற்று, அந்தச் சிலை வைக்கப்பட்டது. ஆனால், அந்தச் சிலை ஏன் அங்கிருந்து அகற்றப்பட்டது என்பது உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும். நான் அந்த விஷயத்துக்குள்ளே சென்று, நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்புகூட, திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி என்னைச் சந்தித்து, அவரும் இந்தக் கோரிக்கையை என்னிடம் எடுத்து வைத்தார். இது பெரியார் நினைத்தது; பெரியார் எங்களுக்குக் கட்டளையிட்டு, நாங்கள் அதை வைத்தது. எனவே, மீண்டும் அந்த இடத்திலே அதை வைக்க வேண்டுமென்று அவரும் என்னிடத்திலே வற்புறுத்தியிருக்கிறார்.

நான் அப்போது சொன்னேன்; பொதுவான இடங்களிலே, போக்குவரத்துக்கு இடையூறாக இதுபோன்று சிலைகள் வைக்கப்படக் கூடாது என்று நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. எனவே, அவரிடம் அந்தச் சட்டச் சிக்கல்களையெல்லாம் எடுத்துச் சொல்லியிருக்கிறேன்.

'நாங்கள் ஏற்கெனவே அனுமதி வாங்கியதுதான்; எனவே, புதிதாக அனுமதி வாங்க வேண்டிய அவசியமில்லை' என்று அவர் சொன்னார். எனவே, அதை வைக்க வேண்டுமென்று கி.வீரமணி வற்புறுத்தியிருக்கிறார்.

அதுமட்டுமல்ல; அண்ணா சாலையிலே பெரியார் சிலை இருக்கிறது; அதேபோல, அண்ணா சிலை இருக்கிறது; மறைந்த எம்ஜிஆர் சிலை இருக்கிறது. ஏற்கெனவே, கருணாநிதியுடைய சிலையும் இருந்தது. எனவே, அந்த இடத்திலே நீங்கள் அதை வைக்க வேண்டுமென்று வற்புறுத்தியிருக்கிறார்.

அண்ணா சாலையில் அதை வைப்பது குறித்து நான் சட்ட வல்லுநர்களோடு ஆலோசனை செய்வது உகந்ததாக இருக்கும். நீதிமன்றம் பிறப்பித்திருக்கிற உத்தரவுக்கும் நாம் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். நிச்சயமாகக் கருணாநிதியின் சிலை அண்ணா சாலையிலே வைக்கப்படும். இது உறுதி".

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x