Published : 01 Sep 2021 03:26 PM
Last Updated : 01 Sep 2021 03:26 PM
பழுதடைந்த அடுக்குமாடிக் குடியிருப்புகள் எழில்மிகு தோற்றப் பொலிவு பெறும் வகையில் புனரமைக்கப்படும் என, அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று (செப். 01) வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை (குடிசைப்பகுதி மாற்று வாரியம்) மீதான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில், அத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்ட அறிவிப்புகள்:
''1. சிதிலமடைந்த 7,500 அடுக்குமாடிக் குடியிருப்புகள் நடப்பு நிதியாண்டில் ரூ.1,200 கோடி திட்ட மதிப்பீட்டில் மறுகட்டுமானம் செய்யப்படும்.
2. மேம்படுத்தப்பட்ட மனைகளுக்கான முழுத் தொகை செலுத்திய 10,000 குடும்பங்களுக்கு நீண்ட காலமாக வழங்கப்படாமல் உள்ள விற்பனைப் பத்திரங்கள் வழங்கப்படும்.
3. வாரிய அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு முழுத்தொகை செலுத்திய 15,000 பயனாளிகளுக்கு நடப்பு நிதியாண்டில் விற்பனைப் பத்திரங்கள் வழங்கப்படும்.
4. கட்டுமானப் பணிகளின் தரத்தினைப் பல்வேறு நிலைகளில் உறுதி செய்ய இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் போன்ற மேன்மையான மூன்றாம் தரப்பு தரக் கட்டுப்பாடு வல்லுநர் குழுக்கள் அமைக்கப்படும்.
5. மறுகட்டுமானம் செய்யும் காலத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் ரூ.8,000 கருணைத் தொகை ரூ.24,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
6. பராமரிப்பின்றி பழுதடைந்த அடுக்குமாடிக் குடியிருப்புகள் ரூபாய் 70 கோடி செலவில் எழில்மிகு தோற்றப் பொலிவு பெறும் வகையில் புனரமைக்கப்படும்.
7. குடியிருப்போர் நலச்சங்கங்களின் பங்களிப்புடன் 'நம் குடியிருப்பு -நம் பொறுப்பு' என்ற திட்டத்தின் மூலம் பராமரிப்பு மற்றும் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும்.
8. வசதியற்ற பயனாளிகளின் சிரமத்தினைக் குறைக்கும் வகையில் வங்கிக் கடன் பெற்று பங்களிப்புத் தொகை செலுத்த வழிவகை செய்யப்படும்.
9. புதிதாகக் கட்டப்படும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் மாற்றுத்திறனாளிகளின் தேவைக்கேற்ப வசதிகள் அமைக்கப்பட்டு, முன்னுரிமை அடிப்படையில் தரைத்தள வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும்.
10. தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கும் குடிசைப் பகுதி வாழ் இளைஞர்களுக்கு முழு நிதியுதவி வழங்கி விளையாட்டுத் திறன் மேம்படுத்தப்படும்.
11. வாரிய திட்டப்பகுதிகள் மற்றும் குடிசைப் பகுதிகளில் வாழும் 10,000 இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கி வேலைவாய்ப்புகள் பெற ஊக்குவிக்கப்படும்''.
இவ்வாறு அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT