Published : 01 Sep 2021 03:20 PM
Last Updated : 01 Sep 2021 03:20 PM
புதுவையில் கரோனா பரவலைத் தடுக்க தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 15-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு ஆகஸ்ட் 31-ம் தேதி நள்ளிரவோடு முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து செப்டம்பர் 15-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி இரவு 10.30 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை ஊரடங்கு தொடர்கிறது. சமூக, பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்காகக் கூடுவது தடை செய்யப்படுகிறது. அனைத்துத் துறை அதிகாரிகளும் தங்களின் கீழ் பணியாற்றும் தகுதியான ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்ய வேண்டும். கல்வி நிறுவனங்கள் விதிமுறைகளைப் பின்பற்றிச் செயல்படலாம்.
அனைத்துக் கடைகளும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கலாம். காய்கறி, பழக்கடைகள் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கலாம். தனியார் நிறுவனங்கள் காலை 9 முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம். ஹோட்டல்கள், விடுதிகள், உணவகங்கள் 50 சதவீத அனுமதியுடன் இரவு 10 மணி வரை இயங்கலாம். சில்லறை மதுபானம், சாராயக் கடைகள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கலாம். கலால்துறை விதிகளுக்கு உட்பட்டு வீடுகளுக்கு மதுபானங்களை விநியோகம் செய்து மதுக்கடைகளில் கூட்டத்தைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்து இரவு 9 மணி வரை இயங்கலாம்.
கடற்கரை சாலை, பூங்காக்கள் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறக்கலாம். வழிபாட்டுத் தலங்கள் இரவு 9 மணி வரை திறக்கலாம். கோயில், திருமண நிகழ்ச்சியில் 25 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். திருமண விழாக்களில் 100 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். இறுதிச்சடங்கில் 20 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT