Published : 01 Sep 2021 11:30 AM
Last Updated : 01 Sep 2021 11:30 AM
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் இன்று காலமானார். அவரது உடல் நாளை பெரியகுளத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.
உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த விஜயலட்சுமி, சென்னை பெருங்குடி தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த இவர் குணமடைந்து, இன்று (செப். 01) வீடு திரும்ப இருந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை 5 மணிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதயநோய் நிபுணர்கள் அவசர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சைப் பலனின்றி காலை 6.45 மணிக்கு விஜயலட்சுமி உயிரிழந்தார்.
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த இவர் திருமணத்துக்குப் பிறகு பெரியகுளத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். ஓ.பன்னீர்செல்வம் அடிக்கடி சென்னை உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல வேண்டி இருந்ததால், கடந்த சில மாதங்களாக சென்னை வீட்டில் குடும்பத்துடன் விஜயலட்சுமி வசித்து வந்தார்.
இவர்களுக்கு கவிதாபானு என்ற மகளும், ரவீந்திரநாத், ஜெயபிரதீப் ஆகிய மகன்களும் உள்ளனர். ரவீந்திரநாத் தற்போது தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினராக உள்ளார்.
இறந்த விஜயலட்சுமியின் உடலுக்கு சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், முக்கியப் பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினர். விஜயலட்சுமியின் உடல் இன்று தேனி மாவட்டம் பெரியகுளத்திற்குக் கொண்டுவரப்பட்டு நாளை (செப். 02) அடக்கம் செய்யப்பட உள்ளது என்று அதிமுகவினர் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT