Published : 31 Aug 2021 07:55 PM
Last Updated : 31 Aug 2021 07:55 PM
பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற தமிழக வீரரும், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவருமான மாரியப்பன் உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றதையடுத்து, சொந்த ஊரில் உறவினர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸ் போட்டியில், இந்தியாவின் சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த சேலம் மாவட்ட வீரர் மாரியப்பன் பங்கேற்றார். கடந்த முறை நடைபெற்ற பாராலிம்பிக்ஸ் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில், தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தார்.
இந்நிலையில் டோக்கியாவில் நடந்து வரும் பாராலிம்பிக்ஸ் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் மாரியப்பன் பங்கேற்றார். தங்கப் பதக்கம் பெறுவார் என்ற நம்பிக்கையில் இருந்த நிலையில் அவர் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
பாராலிம்பிக்ஸ் போட்டியில் மாரியப்பன் பங்கேற்ற நிகழ்ச்சியை, சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள பெரியவடகம்பட்டியில், அவரது இல்லத்தில் உறவினர்கள், நண்பர்கள் அமர்ந்து தொலைக்காட்சி மூலம் கண்டு ரசித்தனர். அப்போது மாரியப்பன் வெள்ளிப் பதக்கம் பெற்றதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் மாரியப்பன் வெள்ளிப் பதக்கம் பெற்றதைக் கண்டு, மகிழ்வுடன் ஆரவாரம் செய்தனர். மேலும், பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் உறவினர்களும், நண்பர்களும் கொண்டாடினர்.
மாரியப்பனின் தாயார் சரோஜா கூறுகையில், ''எனது மகன் தங்கப் பதக்கம் வெல்வார் என்று மிகுந்த நம்பிக்கையில் இருந்தேன். இருப்பினும், இரண்டாம் இடம் பிடித்து, வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார். அவர் நம் நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளதால் மகிழ்ச்சி அடைகிறேன்'' என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT