Published : 31 Aug 2021 07:22 PM
Last Updated : 31 Aug 2021 07:22 PM
கரூர் மாவட்டத்தில் சர்வதேச தரத்திலான ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஆக. 31) தொழில் துறை மீதான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில், அத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு 27 அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் முக்கிய 10 அறிவிப்புகள்:
1. தென்மாவட்டங்கள் பொருளாதார வளர்ச்சி அடையும் வகையில், விருதுநகர் மாவட்டம், குமாரலிங்கபுரம் சிப்காட் தொழிற்பூங்காவில், 250 ஏக்கர் பரப்பளவில், 400 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில், உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் ஒருங்கிணைந்த ஆடைப் பூங்கா உருவாக்கப்படும்.
2. சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பங்கள் அதிக முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுவதால், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி சிப்காட் தொழிற்பூங்காவில், 300 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் இந்தியாவிலேயே முதன்மையான வருங்கால நகர்திறன் பூங்கா உருவாக்கப்படும்.
3. திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், செங்காத்தாகுளத்தில், 576 ஏக்கர் பரப்பளவில் 250 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில், அடிப்படை மற்றும் சிறப்பு உள்கட்டமைப்பு வசதிகளுடன் புதிய சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்படும்.
4. இயற்கைச் சூழலை பாதுகாத்திடவும், தொழிற்சாலைகளின் செயல்பாடு மேம்படவும், அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன், 150 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் , 10 சிப்காட் தொழிற்பூங்காக்கள் மேம்படுத்தப்படும்.
5. சிப்காட் தொழிற்பூங்காக்கள் நீர் ஆதாரத்தில் தன்னிறைவு பெறவும், நீர்நிலைகளைச் சுற்றிலும் பசுமைச் சூழல் உருவாக்கும் பொருட்டும், சிப்காட் தொழிற்பூங்காக்கள் மற்றும் அதன் சுற்றுப்புறத்திலுள்ள நீர்நிலைகள் 100 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் மறுசிரமைக்கப்படும்.
6. பணிபுரியும் மகளிரின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, 70 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில், 2 ஏக்கர் பரப்பளவில் சிறுசேரி மற்றும் பர்கூர் சிப்காட் தொழிற்பூங்காக்களில் சிறப்பு வசதிகளுடன், பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள் அமைக்கப்படும்.
7. தொழில் தொடங்கும் காலத்தினையும் முதலீட்டுச் செலவினையும் குறைத்து, உடனடியாக தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக, முதல்கட்டமாக 5 ஏக்கர் பரப்பளவில் 1,50,000 சதுர அடி கட்டுமானப் பரப்பில், காஞ்சிபுரம் மாவட்டம், நெமிலியில் தயார் நிலையிலுள்ள தொழிற்சாலைகள் 40 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
8. சர்வதேச தரத்திலான ஜவுளிப் பூங்கா ஒன்று சிப்காட் மூலம் கரூர் மாவட்டத்தில் 200 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும்.
9. பாதுகாப்பு தொழில் பெருவழித் திட்டத்தில் கூடுதல் முதலீட்டை ஈர்க்கும் விதமாக, 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னையில் ரேடியோ அதிர்வலை மற்றும் ஆண்டெனா தொழில்களுக்கான பொது சோதனை வசதி மையம் மற்றும் உளுந்தூர்பேட்டையில் ஆளில்லா விமானத் தொழிலுக்கான பொது சோதனை வசதி மையம் அமைக்கப்படும்.
10. வான்வெளி மற்றும் பாதுகாப்புத்துறை சார்ந்த தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில், 50 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில், பாதுகாப்புத் துறை சார்ந்த உற்பத்தி தொழிலுக்கான பொது சோதனை வசதி மையம் திருச்சியில் அமைக்கப்படும்.
ஆகிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT