Published : 31 Aug 2021 03:25 PM
Last Updated : 31 Aug 2021 03:25 PM
ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் திமுக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக, சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
இன்று (ஆக. 31) சட்டப்பேரவை கூடியதும், 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டத்தை (திருத்தம் மற்றும் நீக்கம்) பொன்முடி அறிமுகம் செய்தார். இதில், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.
இதனைக் கண்டித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து, ஓபிஎஸ் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கலைவாணர் அரங்கத்துக்கு முன்பாக இருந்த சாலையில் அமர்ந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினரைக் கைது செய்து, போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். சிறிது நேரத்தில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
அதன் பின்னர், செய்தியாளர்களிடம் ஓபிஎஸ் கூறியதாவது:
"விழுப்புரம் மாவட்டத்தில் ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகத்துக்குத் தமிழக ஆளுநர் மற்றும் சிண்டிகேட் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. ஆனால், திமுக அரசு ஜெயலலிதாவின் பெயரை நீக்கிவிட்டு அப்பல்கலைக்கழகத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் வகையில் சட்ட மசோதா கொண்டு வந்திருக்கிறது.
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கொண்டுவரப்பட்ட இந்த மசோதாவை அறிமுக நிலையிலேயே நாங்கள் எதிர்த்தோம். பேசுவதற்குரிய வாய்ப்பையும் கேட்டோம்.
2011-ல் முதல்வராகப் பொறுப்பேற்ற ஜெயலலிதா, கல்வித்துறையில் அளப்பரிய சாதனைகளைப் புரிந்துள்ளார். இந்தியாவில் எந்த மாநில அரசும் செய்ய முடியாத சாதனைகளை ஜெயலலிதா நிகழ்த்திக் காட்டியுள்ளார். எத்தகைய திட்டங்களைத் தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை செயல்படுத்தினால், மாணவர்கள் படித்து மாநிலம் முன்னேறும் என்பதை ஆராய்ந்து செயல்படுத்தியவர் ஜெயலலிதா.
மாநில மொத்த வருவாயில் 4-ல் ஒரு பங்கு நிதியைக் கல்வித்துறைக்கு ஒதுக்கியவர். உதாரணமாக, மாநிலத்தின் சொந்த வருவாய் 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் என வைத்துக்கொண்டால், அதில் சுமார் 33,000 கோடி ரூபாய் கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டது.
மாணவர்களுக்கு 16 வகையான கல்வி உபகரணங்களைத் தந்தது, இலவசக் கல்வி, பாடப் புத்தகம், சைக்கிள், சீருடை, காலணி, மடிக்கணினி உள்ளிட்ட உபகரணங்கள் எனப் பலவற்றைத் தந்தவர் ஜெயலலிதா. 2011-ல் 27% ஆக இருந்த உயர்கல்வி சேர்க்கை, ஜெயலலிதாவின் சீரிய பணிகளின் காரணமாக 52% வரை உயர்ந்திருக்கிறது. தேசிய சராசரி 24% என்ற நிலையில், நம் மாநிலத்தில் இரண்டு மடங்காக உயர்ந்திருப்பதற்குக் காரணம் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கை.
அவர் கல்வித் தாயாக விளங்கியவர். பிள்ளைகளைப் படிக்க வைப்பதில் பெற்றோருக்கு சிரமம் ஏற்படாமல், மாணவர்களுக்குத் தாயாக, தந்தையாக, ஆசிரியராக இருந்தவர் ஜெயலலிதா. பல்வேறு கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகளைத் தொடங்கியவர் ஜெயலலிதா. அவரின் பெயரைப் பல்கலைக்கழகத்துக்கு வைப்பது சாலச் சிறந்தது. அதனை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கின்றனர்.
அண்ணாமலை பல்கலைக்கழகம் எவ்வளவு தாழ்ந்த நிலையில், நிதிப் பற்றாக்குறையால் இழுத்து மூடும் அளவுக்கு இருந்தபோது, அப்பல்கலைக்கழகத்தைக் காப்பாற்றியவர் ஜெயலலிதாதான். அப்பல்கலைக்கழகத்தை அரசே ஏற்றுக்கொண்டு கிட்டத்தட்ட 6,000 கோடி ரூபாய் நிதியை வழங்கியவர் ஜெயலலிதா. ஒவ்வொரு ஆண்டும் தேவையான நிதியை அளித்து மறுமலர்ச்சியை உருவாக்கியவர்.
ஜெயலலிதாவின் பெயர் இருக்கக் கூடாது என்கிற காழ்ப்புணர்ச்சியைப் பொதுமக்களும், மாணவர்களும், அதிமுகவினரும் திமுக அரசின் நிலைப்பாட்டை எதிர்த்திருக்கின்றனர். ஜெயலலிதா பல்கலைக்கழகம் இப்போதுதான் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கான நிதி, இடம் ஒதுக்கீட்டை அரசுதான் செய்யவேண்டும்".
இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT