Published : 31 Aug 2021 02:00 PM
Last Updated : 31 Aug 2021 02:00 PM
கன்னியாகுமரி முதல் டெல்லி வரை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டு வரும் சைக்கிள் பேரணியை தருமபுரியில் இன்று (ஆக.31) மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் தொடங்கி வைத்தார்.
இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது. இந்திய சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் ‘ஆசாதி கா அம்ருத் மகா உத்ஸவ்’ என்ற தலைப்பில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் (சி.ஆர்.பி.எஃப்) சைக்கிள் பேரணி நடத்தி வருகின்றனர்.
இந்தப் பேரணி கடந்த 22-ம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கடல் சங்கமம் பகுதியில் தொடங்கியது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் வாழ்ந்த திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக இந்தப் பேரணிக் குழுவினர் கர்நாடக மாநிலத்தை அடைகின்றனர்.
அங்கிருந்து ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் வழியாகப் பயணிக்கும் பேரணிக் குழுவினர் காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2-ம் தேதி டெல்லியில் உள்ள ராஜ்கோட் பகுதியில் பேரணியை நிறைவு செய்கின்றனர். இந்தப் பேரணி 2,850 கிலோ மீட்டர் தூரம் கொண்டதாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
நேற்று (ஆக.,30) மாலை தருமபுரி வந்து சேர்ந்த இந்தப் பேரணிக் குழுவினருக்கு தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் கிராமியக் கலை நிகழ்ச்சிகள், மேள, தாளங்களுடன் வரவேற்பு அளித்தார்.
இந்நிலையில், இன்று தருமபுரியில் இருந்து பேரணிக் குழுவினர் பயணத்தைத் தொடங்கும் நிகழ்ச்சி, பென்னாகரம் சாலையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடந்தது. பேரணிக் குழுவினரின் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்து தெரிவித்து, நினைவுப் பரிசுகள் வழங்கிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன், தேசியக் கொடியின் மூவர்ணத்தைக் கொண்ட பலூன்கள் தொகுப்பை வானில் பறக்கவிட்டு பேரணியைத் தொடங்கி வைத்தார்.
முன்னதாக, பேரணிக் குழுவினருக்கு தருமபுரி மாவட்டம் சார்பில் பெண்கள் ஆரத்தி எடுத்து மரியாதை செய்தனர். இந்நிகழ்ச்சியின்போது தருமபுரி சரக டிஎஸ்பி அண்ணாதுரை உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT