Last Updated : 31 Aug, 2021 01:29 PM

8  

Published : 31 Aug 2021 01:29 PM
Last Updated : 31 Aug 2021 01:29 PM

விநாயகர் சதுர்த்தி பேரணிக்குத் தடை; பாஜக ஏற்காது: அண்ணாமலை பேட்டி

புதுச்சேரி

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி பேரணிக்குத் தடை விதித்திருப்பதை பாஜக ஏற்றுக்கொள்ளாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (ஆக.31) புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘‘அனைத்து மாநில பாஜகவுக்கும் உத்வேகம் தரக்கூடியதாக புதுச்சேரி பாஜக மாறியிருக்கிறது. புதுச்சேரியில் பாஜக சார்பில் 6 எம்எல்ஏக்களுடன் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. அற்புதமான, வித்தியாசமான ஆட்சியை புதுச்சேரி மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு முன்பு இருந்த முதல்வரால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை என்றால் மத்திய அரசின் மீதும், ஆளுநர் மீதும் பழிபோடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தோம். இப்போது ஆரோக்கியமான முறையில் ஒரு ஆட்சி நடக்கிறது. அதற்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக முக்கியக் காரணம். இதே உத்வேகத்தில் தமிழகத்திலும் பாஜகவை வளர்க்கப் பாடுபடுவோம்.

புதுச்சேரியில் பாஜக ஆட்சிக்கு வராது. மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். தாமரை மலராது என்று கூறியதை இங்குள்ள தலைவர்கள் முறியடித்துள்ளனர். தற்போது 6 எம்எல்ஏக்கள், 3 நியமன எம்எல்ஏக்கள் என மொத்தம் 9 எம்எல்ஏக்களுடன் ஆட்சியைச் சிறப்பாக வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்காக மக்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன். உழைப்புக்கு மக்கள் வெகுமதி கொடுப்பார்கள் என்று புதுச்சேரி பாஜகவைப் பார்த்துக் கற்றுக் கொண்டுள்ளோம். வருகின்ற காலம் தமிழகத்தில் கூட அடி மேல் அடி எடுத்து வைத்து நிச்சயமாக ஆட்சியைப் பிடிப்போம்.

விநாயகர் சதுர்த்திக்கு தமிழக அரசு ஒரு வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தனி மனிதனாக விநாயகரை வழிபடலாம், சிலையை கரைத்துக் கொள்ளலாம். ஆனால், கூட்டமாகச் செல்ல அனுமதியில்லை என்று தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டும் இதே மாதிரிதான் இருந்தது.

விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்பவர்களிடம் விட்டு விடுங்கள். கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி விழாவை சிறப்பாக நடத்திக் காட்டுவார்கள். காலம் காலமாக விநாயகர் சதுர்த்தி நம்முடைய வாழ்க்கை முறையில் கலந்த ஒரு நிகழ்ச்சியாக இருக்கிறது.

டாஸ்மாக்கைத் திறந்து அதிகமான மக்களை விடுகிறோம். இந்த நிலையில் எதற்காக விநாயகர் சதுர்த்தி பேரணியைத் தடை செய்ய வேண்டும். அரசு கட்டுப்பாடுகளை விதிக்கலாம். ஆனால், நடத்தவே கூடாது என்று சொல்வதை பாஜக ஏற்றுக் கொள்ளாது. வருகிற காலங்களில் முதல்வரைச் சந்தித்து முறையிடுவதா? அல்லது எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து எப்படி இதனை எடுத்துச் செல்வது என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்.

கட்சி நிர்வாகியின் பெயரில் ஒரு வீடியோ வெளிவந்துள்ளது. அதற்கு ஒரு குழு அமைத்துள்ளோம். அந்தக் குழு விசாரித்து நடவடிக்கை எடுக்கும்.’’

இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.

பேட்டியின்போது புதுச்சேரி மாநிலத் தலைவர் சாமிநாதன், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் ஜெ சரவணன்குமார் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x