Last Updated : 31 Aug, 2021 03:13 AM

 

Published : 31 Aug 2021 03:13 AM
Last Updated : 31 Aug 2021 03:13 AM

கேரளாவில் அதிகரிக்கும் கரோனா தொற்று- தமிழகம் வழியாக இயக்கப்படும் ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுமா?

கோவை

கேரள மாநிலத்தில் கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், அங்கிருந்து தமிழகத்துக்கு ரயில்மூலமாக வருபவர்களால் தமிழகத்தில் கரோனா தொற்று பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், கேரளாவில் இருந்து தமிழகம் வழியாக இயக்கப்படும் ரயில்களை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில், கடந்த ஒருவாரமாக தினசரி கரோனா தொற்றுபாதிப்பு சுமார் 30 ஆயிரமாகஉள்ளது. அங்கு கரோனா பரிசோதனை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கையில், தொற்று உறுதியாகும் வீதம் 19.67 சதவீதமாக உள்ளது. கேரளாவில் நேற்றுமுன்தின நிலவரப்படி மொத்தம் 2.12 லட்சம் பேர் கரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில், எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் மட்டும் தலா 29 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். தமிழக எல்லையோரத்தில் உள்ள மாவட்டமான பாலக்காட்டில் மட்டும் நேற்று முன்தின நிலவரப்படி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 15,680 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக தமிழகத்தில் இருந்துகேரளாவுக்கு நேரடியாக பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. ஆனால், கோவை வழியாக கேரளாவுக்கு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், தமிழக-கேரளஎல்லை மாவட்டமான கோவை,திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு பாலக்காட்டில் இருந்து தினந்தோறும் தொழில், மருத்துவ தேவைக்காக ரயில் மூலம் பலர் வந்து செல்கின்றனர். இவர்களால் தமிழகத்திலும் கரோனா தொற்று பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கண்காணிக்க முடியாமல் திணறல்

தமிழக சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கடந்த ஜூலை 31-ம் தேதி அனைத்து துறை செயலர்கள், மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், “கேரளாவில் இருந்து ரயில், விமானம், சாலை மார்க்கமாக தமிழகத்துக்குள் வரும் பயணிகள், பயணம் மேற்கொள்வதற்கு 72 மணி நேரத்துக்குள் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து ‘நெகட்டிவ்’ சான்று வைத்திருக்க வேண்டும் அல்லது இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருப்பதற்கான சான்று வைத்திருக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

ஆனால், கேரளாவில் இருந்து தமிழகத்துக்குள் ரயில் மூலம் வந்திறங்கும் பயணிகளை அரசு துறையினரால் முழுமையாக கண்காணிக்க முடிவதில்லை. கோவை ரயில்நிலையத்தில் நேற்று மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒரே ஒருவர் அமர்ந்து முகக்கவசம் அணியாமல் வருபவர்கள், உரிய சான்று இல்லாதவர்களுக்கு அபராதம் விதித்து வந்தார். காவல்துறை சார்பில் 3 பேர் கேரள பயணிகளை கண்காணிக்கும் பணியில் இருந்தனர். போதிய ஊழியர்கள் இல்லாததால், ஒருசிலரை மட்டுமே நிறுத்தி ஆவணங்களை பரிசோதிக்க முடிகிறது.

டிக்கெட் முன்பதிவில் மாற்றம்

இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “தினந்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் ரயில்நிலையம் வருகின்றனர். அவர்களின் ஆவணங்களை பரிசோதனை செய்வதும், அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்வதும் கடினம். எனவே, ரயில் பயணிகள் இரண்டு தவணைதடுப்பூசி செலுத்திய சான்று அல்லது ஆர்டிபிசிஆர் பரிசோதனை ‘நெகட்டிவ்’ சான்றை பதிவேற்றம் செய்தால் மட்டுமேடிக்கெட் வழங்கும் நடைமுறையை ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்த வேண்டும். மேலும், தொற்று பாதிப்பு குறையும் வரை தற்காலிகமாக கேரளாவில் இருந்து தமிழகம் வழியாக இயக்கப்படும் ரயில்களை நிறுத்திவைக்க வேண்டும்” என்றனர்.

மாநில அரசு கேட்க வேண்டும்

இதுதொடர்பாக, சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, “ரயில்களின் இயக்கத்தை நிறுத்துவது குறித்து ரயில்வே வாரியம்தான் முடிவெடுக்க வேண்டும். மாநில அரசின்வேண்டுகோள்படிதான் ரயில்வேவாரியம் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரித்தது.

எனவே, தமிழக, கேரள மாநிலஅரசுகள் ரயில்களை தற்காலிகமாக இயக்க வேண்டாம் என கோரிக்கை விடுக்க வேண்டும். ஆனால், இதுவரை அதுபோன்று இருமாநில அரசுகளும் தெரிவிக்கவில்லை. தமிழக அரசு தங்கள் மாநில எல்லைக்குள் உள்ள ரயில் நிலையங்களில் ரயில்களை நிறுத்தாமல் செல்ல வேண்டும் என்றுதெரிவித்தால், இங்கு ‘ஸ்டாப்பேஜ்’ அளிக்கப்படாது. ரயில் நிலையங்களில் கண்காணிப்பை அதிகரிக்குமாறு அந்தந்த மாவட்டநிர்வாகங்களிடம் தெரிவிக்கப்படும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x