Published : 31 Aug 2021 03:13 AM
Last Updated : 31 Aug 2021 03:13 AM

எனது மகனுக்கு திருமணம் நடந்ததாக தவறான தகவல்: அமைச்சர் பி.மூர்த்தி விளக்கம்

மகன் தியானேசுடன் அமைச்சர் பி.மூர்த்தி

மதுரை

தனது மகனுக்கு திருமணம் முடிந்துவிட்டதாக தொடர்ந்து பரப்பப்பட்ட தகவலின் பின்னணி யில் உண்மை இல்லை என வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி விளக்கம் அளித் துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் பி.மூர்த்தி மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: எனது மூத்த மகன் பி.எம்.தியானேஷ் (26). இவருக்கு திருமணம் ஆகிவிட்டதாகவும், அதைப் பதிவும் செய்துவிட்டதாகவும் தவறான தகவல் பொதுமக்கள் மற்றும் உறவினர்களிடம் பரப்பப்பட்டு வந்தது.

ஓராண்டுக்கும் மேலாகப் பரவிய இந்தத் தவறான தகவலை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதன் பின்னணி குறித்து எதுவும் தெரியாததால் என்ன செய்வதென்று குழப்பம் நிலவியது. தற்போது எனது மகனுக்குப் பெண் பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

அப்போதுதான் ‘‘உங்கள் மகனுக்குத் திருமணம் ஏற்கெனவே நடந்து முடிந்துவிட்டதே’’ என உறவினர்கள் நேரடியாக கேட்கத் தொடங்கினர். இதை எங்களால் ஆதாரப்பூர்வமாக எப்படி மறுப்பது என தவித்துக் கொண்டிருந்தபோதுதான், அதற்கான வாய்ப்புக் கிடைத்தது.

மதுரை அருகே பூவந்தி கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் முருகன் மனைவி சாந்தி. எனது உறவினரான இவர் நிலக்கோட்டையில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்துக்குத் திருமணப் பதிவு தொடர்பாகச் சென்றபோது, அதே அலுவலகத்தில் வெளிச்சநத்தத்தைச் சேர்ந்த என் பெயர் உள்ள பி.மூர்த்தி மகனுக்குப் பதிவு திருமணம் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதை சாந்தி எங்களிடம் தெரிவித்தார்.

அதிர்ச்சியடைந்த நாங்கள் இதுகுறித்து நிலக்கோட்டை பத்திரப்பதிவு அலுவலகத்தில் விசாரித்தபோது வேறு தகவல் கிடைத்தது. வெளிச்சநத்தத்தைச் சேர்ந்தவர் பாண்டி மகன் மூர்த்தி. இவரது மகன் விஜி வழக்கறிஞராக உள்ளார். இவர் கோவையைச் சேர்ந்த சரவணன் மகள் பிரதீபா என்பவரை நிலக்கோட்டை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தினர். ஓராண்டுக்கு முன்னர் நடந்த இந்தத் திருமணம் குறித்த தகவல் 2 நாட்களுக்கு முன்புதான் எங்களுக்கு தெரிந்தது.

இதுகுறித்து விஜியின் தந்தையிடம் கேட்டபோது தனது மகனுக்கு பதிவுத் திருமணம் நடந்தது உண்மைதான் என்றும் அதற்கான ஆவணங்களையும் காண்பித்தார். வெளிச்சநத்தம் பி.மூர்த்தி என்றாலே பலருக்கும் எனது நினைவுதான் வரும். திருமணம் முடித்தவரின் தந்தையின் பெயர் மூர்த்தி. இவரது தந்தையின் பெயர் பாண்டி என்பதால் பி.மூர்த்தி எனப் பதிவு செய்துள்ளார். எனது தந்தை பெயர் பெரி யண்ணன். பி.மூர்த்தி என்ற பெயரில் வேறு ஒருவர் எங்கள் கிராமத்தில் இருப்பதே இப்போதுதான் நாங்கள் உள்ளிட்ட பலருக்கும் தெரிந்துள்ளது.

இந்தப் பெயர் குழப்பத்தின் பின்னணியில் எனது மகன் திருமணம் குறித்த தகவல் தவறாகப் பரப்பப்பட்டிருக்கலாம். அறியாமையாலும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும் இதுபோன்ற தகவல் பரப்பப்பட்டிருக்கலாம். தற்போதுதான் மறுப்பதற்கும், உண்மையை வெளிப்படுத்தவும் ஆதாரம் கிடைத்துள்ளது. இனிமேல் இதுபோன்ற தகவலைப் பொதுமக்களும், உறவினர்களும் நம்பத் தேவையில்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x