Published : 30 Aug 2021 08:17 PM
Last Updated : 30 Aug 2021 08:17 PM

பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தத் தடை: தமிழக அரசு அறிவிப்பு

பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தத் தடை விதிக்கப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாகத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

’’தமிழ்நாட்டில் தற்போது வரும் பண்டிகைக் காலங்களில் கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த அதிகளவில் மக்கள் கூடுவதைத் தவிர்ப்பது போன்ற தேவையான கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து அமல்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாலும், தற்போது அண்டை மாநிலமான கேரளாவில் ஓணம் மற்றும் பக்ரீத் பண்டிகைக் கொண்டாட்டங்களின்போது மக்கள் அதிக அளவில் கூடி, அதனால் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள சூழ்நிலையிலும், தமிழ்நாட்டில் வருகிற 15.09.2021 வரை கொண்டாடப்படவுள்ள சமய விழாக்களின் கொண்டாட்டத்திற்கு பின்வரும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது:-

* தற்போதுள்ள கரோனா பரவல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, சமய விழாக்களை முன்னிட்டு மதச்சார்பான ஊர்வலங்கள், திருவிழாக்கள் நடத்தத் தடை உள்ளது. பொது இடங்களில் உறியடி உள்ளிட்ட விளையாட்டுகளை நடத்துவதற்கும் தடை விதிக்கப்படுகிறது.

* விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாகப் பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது அல்லது பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அதுபோன்று சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும், நீர்நிலைகளில் சிலைகளைக் கரைப்பதற்கும் அனுமதி இல்லாத நிலையில், இச்சமய விழாக்களைப் பொதுமக்கள் தங்களது இல்லங்களிலேயே கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

* மேற்குறிப்பிட்ட அனுமதி தனிநபர்களுக்கு மட்டும் பொருந்தும். அமைப்புகள் இச்செயல்பாடுகளில் ஈடுபடுவது முழுவதுமாகத் தடைசெய்யப்படுகிறது.

* விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக தனி நபர்கள் தங்களது இல்லங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனி நபர்களாகச் சென்று அருகிலுள்ள நீர்நிலைகளில் சிலைகளைக் கரைப்பதற்கும் அனுமதிக்கப்படுகிறது. சென்னையைப் பொறுத்தவரை, கடற்கரையில் குறிப்பாக சாந்தோம் முதல் நேப்பியர் பாலம் வரையிலான வழித்தடத்தில் இச்செயல்பாட்டிற்கு முற்றிலுமாகத் தடை விதிக்கப்படுகிறது.

* தனிநபர்கள், தங்களது இல்லங்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட சிலைகளை ஆலயங்களின் வெளிப்புறத்திலோ / சுற்றுப்புறத்திலோ வைத்துச் செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இச்சிலைகளைப் பின்னர் முறையாக அகற்றுவதற்கு இந்து சமய அறநிலையத்துறையால் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* தற்போது நடைமுறையில் உள்ள சமூக இடைவெளியினைக் கடைப்பிடித்தல் மற்றும் இதர கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மேற்குறிப்பிட்டுள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

* இவ்வனுமதி தனி நபர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால் மேற்குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை எவ்வகையிலேனும் மீறுபவர்கள் மீது சட்டப்பூர்வமான தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

* இந்த விழாவிற்கான பொருட்கள் வாங்கக் கடைகள் மற்றும் சந்தைகளுக்குச் செல்லும் பொதுமக்கள் தவறாது முகக்கவசம் அணிவதோடு, அவ்விடங்களில் பொருட்கள் வாங்க நிற்கும்போதும் சமூக இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

* சென்னை, வேளாங்கண்ணி, நாகப்பட்டினம் மாவட்டம் மற்றும் இதர இடங்களில் கிறித்தவ சமயத்தாரால் கொண்டாடப்படவுள்ள
மரியன்னையின் பிறந்த நாள் திருவிழாவின்போது, பொது இடங்களில் மக்கள் கூடுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது.

மேற்காணும் வழிமுறைகளைப் பொது மக்கள் தவறாது கடைப்பிடிக்குமாறும், இவ்விழாக் கொண்டாட்டங்களின்போது பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினைக் கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றைக் கட்டாயம் பின்பற்றவும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை / சிகிச்சை பெறவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கரோனா தொற்றினை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டுமென அரசு சார்பாகக் கேட்டுக்கொள்ளப்படுகிறது’’.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x