Published : 30 Aug 2021 07:03 PM
Last Updated : 30 Aug 2021 07:03 PM
வேலூரைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டத்திலும் ‘டைடல் பார்க்’ விரைவில் அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் தெரிவித்தார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வருவாய்த் துறை, பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா மற்றும் பிரதம மந்திரி குடியிருப்புத் திட்ட வீடுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யா பாண்டியன் வரவேற்றார். சார் ஆட்சியர் அலர்மேல்மங்கை முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கதிர் ஆனந்த் (வேலூர்), சி.என்.அண்ணாதுரை (திருவண்ணாமலை) ஆகியோர் 691 பயனாளிகளுக்கு 16 கோடியே 58 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான வீட்டு மனைப் பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
அப்போது, வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் பேசியதாவது:
"தமிழகத்தில் கரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. பக்கத்தில் உள்ள கேரளாவில் நாள் ஒன்றுக்கு 40 ஆயிரம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் 1,500 பேர் மட்டுமே கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு மேற்கொண்டுள்ள துரித நடவடிக்கையே இதற்குக் காரணம்.
தேர்தலின்போது திமுக அறிவித்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. புதிதாகத் தொடங்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்துக்குத் தேவையான துறை அலுவலகங்கள் விரைவில் கொண்டுவரப்படும். மாணவர்களுக்குத் தேவையான கல்விக் கடன்கள் தடையில்லாமல் வழங்க வங்கிகள் முன்வர வேண்டும்.
நாட்றாம்பள்ளி அடுத்த மல்லகுண்டா பகுதியில் 1,000 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும். அதேபோல, வேலூரைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டத்திலும் ‘டைடல் பார்க்’ கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் இம்மாவட்டம் வளர்ச்சி பெறும்’’.
இவ்வாறு கதிர் ஆனந்த் பேசினார்.
இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா பேசுகையில், ‘‘இலவச வீட்டு மனைப் பட்டா மற்றும் பிரதம மந்திரி குடியிருப்புத் திட்ட வீடுகள் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட 976 மனுக்களின் முதல் கட்டமாக 691 பயனாளிகளுக்கு ரூ.16.58 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 7 நாட்களில் மனுக்கள் மீது பரிசீலனை செய்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ளவர்களுக்கு விரைவில் வழங்கப்படும்’’ என்று பேசினார்.
இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராசு, சட்டப்பேரவை உறுப்பினர்கள் நல்லதம்பி (திருப்பத்தூர்), அ.செ.வில்வநாதன்(ஆம்பூர்), தேவராஜி (ஜோலார்பேட்டை), தனித்துணை ஆட்சியர் கிருஷ்ணமூர்த்தி, வேளாண் ஒழுங்கு விற்பனைக்கூடம் கூட்டுறவு சங்கத் தலைவர் எஸ்.ராஜேந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன், வாணியம்பாடி ஆர்டிஓ காயத்ரி சுப்பிரமணி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் அருண் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தாமதமாக வந்த எம்.பி., எம்.எல்.ஏக்கள்
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி காலை 10 மணியளவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா, டிஆர்ஓ தங்கைய்யா பாண்டியன், சார் ஆட்சியர் அலர்மேல்மங்கை, திட்ட இயக்குநர் செல்வராசு உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் இன்று காலை 9.45 மணிக்கே விழா நடைபெறும் இடத்துக்கு வந்தனர்.
பயனாளிகளும் காலை 8.30 மணி முதல் வரத் தொடங்கினர். சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்ளும் திமுக எம்.பி., எம்எல்ஏக்கள் காலை 11 மணி கடந்தும் விழா நடைபெறும் இடத்துக்கு வரவில்லை. இதனால், ஆட்சியர் முதல் பயனாளிகள் வரை சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக விழா அரங்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, காலை 11.30 மணிக்கு சிறப்பு விருந்தினர்கள் வந்ததைத் தொடர்ந்து விழா தொடங்கியது. இதனால், பயனாளிகளும், அரசு அதிகாரிகளும் பாதிக்கப்பட்டனர்.
.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT