Published : 30 Aug 2021 06:21 PM
Last Updated : 30 Aug 2021 06:21 PM

'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் கட்டிய மதுரை குன்னத்தூர் சத்திரம்: சுற்றுலாப் பயணிகளுக்கு வரப்பிரசாதம் 

மதுரை மாநகராட்சி ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ.7.91 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள குன்னத்தூர் சத்திரம் கட்டிடம் இன்று திறக்கப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

மதுரை மாநகர் மிகவும் பழமையும், தொன்மையும் வாய்ந்த நகரமாகும். இம்மாநகரில் உலகப் புகழ்பெற்ற அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான உள்ளுர், வெளியூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும்பாது அதன் அருகிலுள்ள புதுமண்டபக் கடைகளில் புத்தகங்கள், அழகு சாதனப் பொருட்கள், ஆடைகள், திருவிழாக்களுக்கான பொருட்கள், பாத்திரங்கள் மற்றும் நினைவுப் பொருட்கள், பாரம்பரிய ஆடைகளை வாங்கிச் செல்வார்கள். தையல் கலைஞர்களிடம் ஆடைகள் தைத்தும் வாங்கிச் செல்கின்றனர்.

இப்பகுதியில் உள்ள கடைகளால் புது மண்டபத்தின் புராதன அமைப்புகள் வெளியில் தெரிவதில்லை. எனவே, புராதன சின்னங்களை மேம்படுத்தும் வகையில் புது மண்டபத்தின் வரலாற்றுச் சின்னத்தைப் பாதுகாக்க இப்பகுதியில் அமைந்துள்ள கடைகளை குன்னத்தூர் சத்திரம் பகுதிக்கு மாற்றியமைக்கத் திட்டமிடப்பட்டது.

அதன்படி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.7.91 கோடி மதிப்பீட்டில் அடிப்படை வசதிகளுடன் கூடிய வகையில் குன்னத்தூர் சத்திரம் மூன்று தளங்களாக அமைக்கப்பட்டுள்ளது. புதுமண்டபத்தில் செயல்பட்டு வந்த டெய்லரிங் கடைகள், புத்தகக் கடைகள், பாத்திரக் கடைகள் உள்ளிட்ட கடைகள் இந்த இடத்திற்கு மாற்றம் செய்யப்படுகின்றன.

இக்கட்டிடத்தில் ஒவ்வொரு தளத்திற்கும் கடைகள் பிரிக்கப்பட்டு சுமார் 190 கடைகளும், 90 டெய்லரிங் கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குன்னத்தூர் சத்திர வணிக வளாகக் கட்டிடத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். மதுரையில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குத்துவிளக்கேற்றி இந்தக் கட்டிடத்தைப் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் கே.பி.கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x