Published : 30 Aug 2021 05:46 PM
Last Updated : 30 Aug 2021 05:46 PM
நாளை நடைபெறும் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் மேகேதாட்டு அணை கட்டுமானம் குறித்த விவாதம் எடுத்துக் கொள்ளப்படக் கூடாது எனப் புதுச்சேரி சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று (ஆக.30) முதல்வர் ரங்கசாமி மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக அரசு சார்பில் தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தார்.
அப்போது அவர் பேசுகையில், ‘‘காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் புதியதாக ஓர் அணையைக் கட்ட கர்நாடக மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வணை கட்டப்பட்டால் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் டெல்டா பகுதிக்கு வழங்கப்பட வேண்டிய 7 டி.எம்.சி. காவிரி நீர் முழுமையாகக் கிடைக்கப் பெறாமல் போகும் அபாயம் உள்ளது.
மேலும், மேகேதாட்டுவில் அணை கட்டப்பட்டால் சுமார் 67 டி.எம்.சி. காவிரி தண்ணீரைத் தடுத்து சேமிக்க முடியும். இதனால் கீழ்ப்பாசனப் பகுதிகளான தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வரவேண்டிய நீரில் பற்றாக்குறை ஏற்பட்டு புதுச்சேரி, காரைக்கால், டெல்டா பகுதியில் விவசாயம் பாதிப்புள்ளாகி, புதுச்சேரி மாநிலத்தில் நெல் உற்பத்தி மற்றும் பொருளாதாரம் முற்றிலும் பாதிக்கும் என்ற கருத்து உள்ளது.
மேகேதாட்டு அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்துமாறு தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. 3.12.2018 அன்று நடைபெற்ற 2-வது காவேரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் புதுச்சேரி அரசு தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக புதுச்சேரியில் 14.7.2021 அன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி மேகேதாட்டு அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்துமாறு மத்திய அரசுக்குக் கடிதம் எழுத முடிவு செய்யப்பட்டது. அன்றே பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் மத்திய நீர்வள ஆதாரத் துறை அமைச்சர் ஆகியோருக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழக அரசு மூலம் உச்ச நீதிமன்றத்தில் இது சம்பந்தமாக வழக்குத் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளபோது, அது நீதிமன்ற வரம்புக்கு உட்பட்டதாகும். எனவே நாளை (ஆக.31) நடைபெறவுள்ள 13-வது காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் குறிப்பிடப்பட்டுள்ள மேகேதாட்டு அணை கட்டுமான விவாதம் எடுத்துக் கொள்ளப்படக் கூடாது என சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்ற வேண்டுகிறேன்’’ என்று முதல்வர் ரங்கசாமி பேசி முடித்தார்.
அப்போது நாஜிம் (திமுக) எம்எல்ஏ பேசுகையில், ‘‘உச்ச நீதிமன்றத்தில் மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாகத் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது. அந்த வழக்கில் புதுச்சேரி அரசும் ஒரு மனுதாரராகச் சேரவேண்டும்’’ என்றார்.
அமைச்சர் லட்சுமிநாராயணன் பேசும்போது, ‘‘தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கில் நாமும் ஒரு மனுதாரராகத் தாமாகவே சேர்க்கப்பட்டுள்ளோம். ஆகவே, தனியாக வழக்குத் தொடர வேண்டியதில்லை’’ என்றார்.
பிஆர்.சிவா (சுயேச்சை) பேசும்போது, “பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவதைத் தாண்டி, இங்குள்ள 6 பாஜக எம்எல்ஏக்களும் டெல்லி சென்று இவ்விவகாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழகம், புதுச்சேரி மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் தெளிவான முடிவை எடுக்க வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்” என்றார்.
அமைச்சர் நமச்சிவாயம் பேசும்போது, “மேகேதாட்டுவில் அணை கட்டக்கூடாது என்பதில் புதுச்சேரி பாஜக தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கிறது. முதல்வர் கொண்டுவந்த தீர்மானத்தை முழுமையைாக பாஜக ஆதரிக்கிறது. ஏற்கெனவே நான் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்து புதுச்சேரிக்கான 7 டி.எம்.சி தண்ணீரை வாங்கியுள்ளேன். ஆகவே இவ்விஷயத்தில் நிச்சயம் உறுதியாக இருப்போம்’’ எனத் தெரிவித்தார்.
அசோக் பாபு (நியமன எம்எல்ஏ) பேசும்போது, ''மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக தமிழக அரசுடன் இணைந்து இல்லாமல், உச்ச நீதிமன்றத்தில் புதுச்சேரி அரசு தனியாக ஒரு வழக்கைத் தொடர வேண்டும். அதன் மூலம் தனியாகத் தீர்ப்பைப் பெற்று நமது மாநிலத்துக்குக் கிடைக்க வேண்டிய முழுமையான தண்ணீரைப் பெற்றுக்கொள்ள வேண்டும்’’ என்றார்.
இவ்வாறு பேரவையில் உறுப்பினர்கள் பேசி முடித்த நிலையில், இறுதியாக சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், ‘‘மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக பேரவையில் முதல்வர் கொண்டுவந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்படுகிறது’’ என அறிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT