Published : 22 Feb 2016 04:22 PM
Last Updated : 22 Feb 2016 04:22 PM
திருப்பத்தூர் அருகே கடந்த 1980-ம் ஆண்டு ஓடும் காரில் வெடிகுண்டு வீசி 3 போலீஸார் உள்ளிட்ட 6 பேர் கொல்லப்பட்ட வழக்கில் நக்சலைட் சிவலிங்கத்துக்கு 5 ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் கடந்த 1980-ம் ஆண்டுகளில் நக்சலைட் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. அந்த காலகட்டத்தில் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்த அன்பு என்ற சிவலிங்கம், பழனி, மகாலிங்கம் உள்ளிட்டோர் நக்சலைட் இயக்கத்தில் தீவிரமாக இருந்தனர். இவர்களை போலீஸார் தேடிவந்தனர்.
திருப்பத்தூர் தாலுகா காவல் ஆய்வாளர் பழனிச்சாமி தலைமையிலான போலீஸார் கடந்த 1980-ம் ஆகஸ்ட் 6-ம் தேதி அதிகாலை ஏலகிரி மலையடிவாரத்தில் பதுங்கி இருந்த நக்சலைட் சிவலிங்கம், பெருமாள், ராஜப்பா, செல்வம், சின்னதம்பி ஆகியோரை பிடித்தனர்.
திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் இவர்களிடம் முதல் கட்ட விசாரணை முடிந்த நிலையில் அனைவரையும் வேறு ஒரு தனி இடத்துக்கு காரில் அழைத்துச் சென்றனர். அப்போது, வக்கணம்பட்டி அருகே சென்றபோது மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து ஓடும் காரில் இருந்து சிவலிங்கம் தப்பினார்.
இந்த சம்பவத்தில் ஆய்வாளர் பழனிச்சாமி, தலைமைக் காவலர் ஏசுதாஸ், முருகேசன், நக்சலைட்டுகள் பெருமாள், ராஜப்பா, செல்வம் ஆகியோர் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் நக்சலைட் சின்னதம்பி மீட்கப்பட்டார்.
'ஆபரேஷன் அஜந்தா' தொடங்க உத்தரவிட்ட எம்ஜிஆர்
வேலூரில் நடந்த ஆய்வாளர் பழனிச்சாமியின் இறுதி ஊர்வலத்தில் அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் கலந்துகொண்டார். தமிழ்நாட்டில் நக்சலைட்டுகளை ஒழிக்க பழனிச்சாமியின் மகள் அஜந்தா பெயரில் ‘ஆபரேஷன் அஜந்தா’ தொடங்க உத்தரவிட்டார்.
போலீஸார் உள்ளிட்ட நக்சலைட்டுகள் கொல்லப்பட்ட வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்தனர். விசாரணை காலத்தில் சின்னதம்பி உயிரிழந்தார். தலைமறைவாக இருந்த நக்சலைட் சிவலிங்கம் கடந்த 2009-ம் ஆண்டு திருவள்ளூர் அருகே கியூ பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணை வேலூர் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி நடராஜன் முன்னிலையில் நடந்தது. இந்த வழக்கில் நக்சலைட் சிவலிங்கத்துக்கு 5 ஆயுள் தண்டனை மற்றும் வெடிகுண்டு பயன்படுத்திய குற்றத்துக்காக 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது
இந்த தீர்ப்பு குறித்து ஆய்வாளர் பழனிச்சாமியின் மனைவி லோட்டஸ் பிலோமினா கூறும்போது, ‘‘கடந்த 35 ஆண்டுகளாக தாங்கிக்கொள்ள முடியாத இழப்பை சந்தித்து விட்டேன். 2 மகள்களுடன் நான் பட்ட துன்பத்துக்கு அளவே இல்லை. இத்தனை ஆண்டுகள் கழித்து தண்டனை கொடுத்தது மகிழ்ச்சியாக உள்ளது’’ என்றார்.
தமிழ்நாட்டில் நக்ஸலைட் ஒழிப்புப் பணியை சிறப்பாக வழி நடத்திய ஓய்வுபெற்ற டிஜிபி வால்டர் தேவாரத்தை தொடர்புகொண்டு கேட்டபோது, ‘‘இந்த தீர்ப்பு, நீதிக் கும் பாதிக்கப்பட்ட குடும்பம் மற்றும் பொதுமக்களுக்கும் கிடைத்த வெற்றி. வெடிகுண்டு வீச்சு சம்பவத்துக்குப் பிறகு நக்ஸலைட்களை ஒடுக்குவதில் போலீஸாருக்கு பொதுமக்களின் ஆதரவு அதிகரித்தது.
தமிழ்நாடு, ஆந்திராவில் ஒரே நேரத்தில் நக்ஸலைட்கள் காலூன்றி னர். ஆபரேஷன் அஜந்தா மூலம் தமிழ்நாட்டில் 6 மாதங்களில் நக்ஸ லைட் இயக்கத்தை முழுமையாக ஒழித்தோம். ஆனால், ஆந்திராவில் இன்னும் நக்ஸலைட் இயக்கம் செயல்படுகிறது. நக்ஸலைட் ஒழிப் பில் தமிழக க்யூ பிரிவு போலீஸார் சிறப்பாக செயல்பட்டனர்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT