Published : 30 Aug 2021 03:13 AM
Last Updated : 30 Aug 2021 03:13 AM
தமிழகத்தில் 1956-ல் தமிழ்மொழி ஆட்சி மொழி என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது 23.01.1957-ல் அரசிதழில் வெளியிடப்பட்டது. அந்த ஆண்டே அரசு அலுவலகங்களில் தமிழ்மொழி ஆட்சிமொழிக் குழு அமைக்கப்பட்டது. இருப்பினும் ஆட்சி அலுவலக விதிகள், விதித் தொகுப்புகள், நடைமுறை நூல்கள், படிவங்கள் ஆகிய அனைத்தும் ஆங்கிலத்தில் இருந்தன. அவற்றை உடனடியாகத் தமிழுக்கு மாற்றுவதில் சிக்கல்கள் ஏற்பட்டன.
எனவே இக்குழுவின் பணிகள் அனைத்தையும், தமிழ் வளர்ச்சித் துறை என்ற தனித் துறையை உருவாக்கி ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தை நிறைவேற்றிட அரசு முடிவு செய்தது. இதையடுத்து 1971-ல் தமிழ் வளர்ச்சி இயக்ககம் எனும் தனித்துறைத் தலைமை அலுவலகத்தை தோற்றுவித்தது.
ஆட்சிமொழித் திட்ட ஆய்வு தொடர்பாக இயக்குநர், துணைஇயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் முன் பயணத் திட்டம் தயார் செய்யப்பட்டு அதன்படி அரசு அலுவலகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி அரசு அலுவலக பதிவேடுகள், கோப்புகள், காலமுறை அறிக்கைகள், கடிதப் போக்குவரத்து, அலுவலக ஆணைகள் உள்ளிட்டவை தமிழ்மொழியை பின்பற்றி செயல்படுத்தப்படுகின்றனவா என ஆய்வு செய்யப்படும். அதன் அடிப்படையில் மதிப்பெண்ணும் அளிக்கும் பணியை மாநகராட்சிப் பகுதிகளில் துணை இயக்குநர் நிலையிலும், மாவட்டங்களில் உதவி இயக்குநர் நிலையிலும் அதிகாரிகள் மேற்கொள்கின்றனர்.
மாவட்டத்துக்கொரு துணை அல்லது உதவி இயக்குநர் பணியமர்த்தப்பட வேண்டிய நிலையில் பல மாவட்டங்களில் கூடுதல் பொறுப்பாக ஒருவரே ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்களின் கூடுதல் பொறுப்புகளை கவனித்து வருகின்றனர். இதனால் தமிழ் வளர்ச்சித் துறையின் நலத்திட்ட உதவிகளும், ஆட்சி மொழி திட்டத்தை செயல்படுத்துவதிலும் மந்தநிலை நிலவுகிறது என்கிறார் கல்லைத் தமிழ் சங்க நிர்வாகி புலவர் மு.குணசேகரன்.
தற்போது ஆட்சி மாற்றத்தின் விளைவாக தமிழ் வளர்ச்சித் துறை மீண்டும் வேகமெடுத்திருக்கிறது.
15 மாநகராட்சிப் பகுதிகளில் 15 துணை இயக்குநர்கள் பணியிடங்களில் தற்போது 5 பணியிடங்கள் காலியாக உள்ளன. 38 மாவட்டங்கள், நிர்வாக அமைப்பு நிலையில் உள்ள42 உதவி இயக்குநர்கள் பணியிடங்களில் 21 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தமிழ் வளர்ச்சித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேற்கண்ட பணியிடங்களை நிரப்பும் பட்சத்தில் தற்போதுள்ள உதவி இயக்குநர்களின் பணிச்சுமை குறையும். உதவி இயக்குநர்கள் தனித்தன்மையோடும், அர்ப்பணிப்பு உணர்வோடும் பணி செய்ய வாய்ப்புக் கிடைக்கும். தமிழ் வளர்ச்சித் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பயனாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT