Published : 29 Aug 2021 06:35 PM
Last Updated : 29 Aug 2021 06:35 PM
கீழணையிலிருந்து கடலூர் மாவட்ட டெல்டா பகுதி, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு சம்பா பருவ பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
கீழணையிலிருந்து இருந்து இன்று (ஆக. 29) மதியம் கடலுார் மாவட்டத்துக்கு நேரடி பாசனம் பெறும் கொள்ளிடம் வடக்கு ராஜன் வாய்க்கால், கான்சாகிப் வாய்க்கால், கவரப்பட்டு வாய்க்கால், கஞ்சன் கொல்லை வாய்க்கால், வடவார்,தஞ்சாவூர், மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்டங்களில் பாசனம் பெறும் கொள்ளிடம் தெற்கு ராஜன் வாய்க்கால், குமுக்கிமன்னியார் மற்றும் வினாயகன்தெரு வாய்க்கால் ஆகிய வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. கடலூர் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு பாசன மதகுகளை திறந்து வைத்தனர்.
வடவாறு வாய்க்காலில் விநாடிக்கு 600 கன அடியும், வடக்கு ராஜன் வாய்க்காலில் விநாடிக்கு 400 கன அடியும், தெற்கு ராஜன் வாய்க்காலில் விநாடிக்கு 400 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது. மற்ற வாய்க்கால்களில் குறைந்த அளவு தண்ணீர் திறக்கப்பட்டது.
இதன் மூலம், கடலூர் மாவட்ட டெல்டா பகுதி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்டங்களில் மொத்தம் 1 லட்சம் 31 ஆயிரம் 903 ஏக்கர் பாசனம் பெறும். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். 9 அடி உயரம் கொண்ட கீழணையில் தற்போது 8.5 அடி தண்ணீர் உள்ளது.
இதுபோல, காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியில் இருந்தும் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. ராதா மதகில் விநாடிக்கு 10 கன அடியும், வீராணம் புதிய மதகில் விநாடிக்கு 74 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன், மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம், எம்எல்ஏக்கள் ஜெயங்கொண்டம் கண்ணன், சீர்காழி பன்னீர்செல்வம், காட்டுமன்னார்கோவில் சிந்தனைச்செல்வன், கடலூர் பொதுப்பணித்துறை நீர் ஆதார அமைப்பின் மேற்பார்வை பொறியாளர் ரவி மனோகர், சிதம்பரம் பொதுப்பணித்துறை நீர் ஆதார அமைப்பின் செயற்பொறியாளர் சாம்ராஜ், உதவி செயற்பொறியாளர்கள் சிதம்பரம் பாலமுருகன், அணைக்கரை அருணகிரி, விவசாய சங்க தலைவர்கள் இளங்கீரன், அத்திப்பட்டு மதிவாணன், ரெங்கநாயகி, ரவீந்திரன், பாலு மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசுகையில், "வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு விவசாயிகளின் ஆலோசனை பேரில் சம்பா பருவ பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கு தேவையான தண்ணீர் உள்ளது. தண்ணீர் வரத்தும் நன்றாக உள்ளது. டெல்டா பகுதி விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு ரூ. 61 லட்சத்துக்கு உரம், விதை நெல் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. குறுவை சாகுபடியில் 40 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் ஆறுவடை செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளின் நலன் கருதி மாவட்டத்தில் 108 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. கிராமம் தோறும் கலைஞர் வேளாண்மை ஒருங்கிணைப்பு திட்டம் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விவசாயிகளை மதிக்க வேண்டும் என்ற அடிப்படையில் மாதம் தோறும் ஒரு சட்டப்பேரவை உறுப்பினர், விவசாயிகளை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க முதல்வர் ’விவசாயிகளுடன் ஒருநாள்' திட்டத்தை அறிவித்துள்ளார்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT