Published : 29 Aug 2021 06:17 PM
Last Updated : 29 Aug 2021 06:17 PM
உள்ளாட்சித் தேர்தல் தேதியை ஓரிரு நாட்களில் முதல்வர் அறிவிப்பார் என, மாநில நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
திருச்சி மாநகராட்சி ரூ.54.27 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படவுள்ள குடிநீர் அபிவிருத்தித் திட்டப் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு இன்று (ஆக. 29) தொடங்கிவைத்தார். சட்டப்பேரவையின் மணப்பாறை தொகுதி உறுப்பினர் பி.அப்துல் சமது, மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ.முஜிபுர் ரகுமான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:
"அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம் நகர்ப்புறங்களுக்கு அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், முதல்வரின் உத்தரவின்பேரில் நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் மாநிலத்தில் ஆண்டு முழுவதும் குடிநீர் ஆதாரம் உள்ள இடங்களில் ஜல் ஜீவன் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.
திருச்சி மாநகராட்சியை விரிவுபடுத்தும் திட்டத்தில் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் எண்ணிக்கை இருக்கும். 1976-ல் அப்போதைய முதல்வர் மு.கருணாநிதியால் கட்டப்பட்ட காவிரிப் பாலத்தை கடந்த ஆட்சியில் முறையாக சீரமைப்பு செய்யாததால் வலுவிழந்துள்ளது.
எனவே, தற்போதுள்ள பாலத்துக்கு அருகில் புதிதாக ரூ.80 கோடியில் புதிய பாலம் கட்டப்படவுள்ளது. புதிய காவிரிப் பாலப் பணிகள் முடிந்தவுடன், அங்கிருந்து கம்பரசம்பேட்டை வரையும், தலைமை அஞ்சல் நிலையத்தில் இருந்து எம்ஜிஆர் சிலை ரவுண்டானா வரையும் உயர்மட்ட சாலைகள் அமைக்கப்படவுள்ளன.
மேலும், உய்யக்கொண்டான் கரையையொட்டி எம்ஜிஆர் சிலை ரவுண்டானா முதல் அல்லித்துறை வரை 60 அடி அகலத்துக்கும், புத்தூரில் இருந்து வயலூர் செல்வதற்கும் புதிய சாலைகள் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
மேலும், திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், வணிக வளாகம் கட்டவும் முதல்வர் அனுமதி அளித்துள்ளார். சேதமடைந்துள்ள திருச்சி கோட்டை ரயில்வே மேம்பாலத்துக்குப் பதிலாக புதிய மேம்பாலத்தை மாநகராட்சி நிர்வாகமே கட்டவுள்ளது.
மாநகராட்சியுடன் இணைக்கப்படும் உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது பதவியில் உள்ளவர்கள் பதவிக் காலம் முடியும் வரை அந்தப் பதவியில் நீடிப்பார்கள். மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தப்படும்போது அங்கு தேர்தல் நடத்தப்படாது. உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேதியை ஓரிரு நாட்களில் முதல்வர் அறிவிப்பார்".
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக, மாநகராட்சியின் 49-வது வார்டுக்குட்பட்ட ஆழ்வார்தோப்பு பகுதியில் ரூ.95 லட்சம் மதிப்பில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணியை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார். மேலும், அண்ணா நகர் உழவர் சந்தை அருகில் உய்யகொண்டான் ஆற்றின் வடகரையில் சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் ரூ.1.9 கோடி மதிப்பில் நடைபாதை மற்றும் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பூங்கா மற்றும் உறையூர் தியாகராஜ நகரில் சட்டப்பேரவையின் திருச்சி மேற்குத் தொகுதி உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சத்தில் கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டிடம் ஆகியவற்றை அமைச்சர் கே.என்.நேரு திறந்துவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT