Published : 29 Aug 2021 04:45 PM
Last Updated : 29 Aug 2021 04:45 PM
ஆக்கிரமிப்பில் உள்ள மற்றும் முறைகேடாக அபகரிக்கப்பட்ட மற்றும் விற்பனை செய்யப்பட்ட தமிழ்நாடு வக்பு வாரியத்தின் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன என, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில முதன்மைத் துணைத் தலைவரும், தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவருமான எம்.அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் இன்று (ஆக. 29) செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
"கடந்த ஆட்சியிலும் மற்றும் இதுவரை வக்பு வாரியத் தலைவராக பொறுப்பில் இருந்தவர்கள் செய்யாத அல்லது செய்யத் தவறிய பல்வேறு முக்கிய பணிகளை செய்யவுள்ளோம்.
குறிப்பாக, ஆக்கிரமிப்பில் உள்ள மற்றும் போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்ட மற்றும் அபகரிக்கப்பட்ட வக்பு வாரியத்துக்குச் சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளைக் கண்டறிந்து, அவற்றை மீட்டெடுக்கும் மிகப் பெரிய நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளோம்.
தங்களது ஆட்சி, அதிகாரம், செல்வாக்கு, பண பலம் ஆகியவற்றை பயன்படுத்தி, இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், எவ்வித பாரபட்சமும் பார்க்காமல் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பதில் எந்த தயக்கமும் காட்ட வேண்டாம் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
வக்பு வாரியச் சொத்துக்களைப் பராமரிக்கும் பணியில் மதரசாக்கள், தர்காக்கள் உள்ளிட்ட நிர்வாகங்களுக்கு மத்தியில் பல்வேறு மோதல்கள், குற்றச்சாட்டுகள் உள்ளதால், அந்த நிர்வாகங்களைச் சீரமைக்கும் நடவடிக்கைகளை வக்பு வாரியம் சட்டரீதியாக மேற்கொண்டு வருகிறது.
முறைகேடுகளில் ஈடுபடும் வக்பு வாரிய கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் மீது இதுவரை சரியான நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். குற்றம் நிரூபிக்கப்படுவோர் மீது எந்த சமரசத்துக்கும் இடமின்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அந்தவகையில், முறைகேடுகளில் ஈடுபட்டதாக மூத்த கண்காணிப்பாளர் ஒருவர் 2 நாட்களுக்கு முன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பலர் மீது வந்துள்ள முறைகேடு புகார் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். முறைகேட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.
வக்பு வாரியச் சொத்துகள் மீட்கப்பட்டு பொதுமக்களுக்கான கல்வி நிறுவனங்களாகவும், மருத்துவமனைகளாகவும் மற்றும் பல நல்ல திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான திட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.
வக்பு வாரியத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் வெளிப்படைத்தன்மையுடனும், அதிகாரம் மற்றும் அரசியல் குறுக்கீடுகளுக்கு இடமின்றி முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வக்பு வாரிய பணியிடங்களுக்கு இனி வெளிப்படைத்தன்மையுடன் ஆள் தேர்வு நடத்தப்படவுள்ளது. முறைப்படி அறிவிப்பு செய்து, விண்ணப்பம் பெற்று, தேர்வு நடத்தி, நல்ல மதிப்பெண் பெறும் உரிய தகுதிவாய்ந்தவர்கள் மட்டுமே வக்பு வாரிய பணியிடங்களில் நியமனம் செய்யப்படுவர். அந்தவகையில், வக்பு வாரியத்தில் புதிதாக 27 இளநிலை அலுவலர்களைத் தொடர்புடைய அரசுத் துறை மூலம் போட்டித் தேர்வு நடத்தி தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் வக்பு வாரியம் நேரடியாக தலையிடாது".
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT