Published : 29 Aug 2021 04:16 PM
Last Updated : 29 Aug 2021 04:16 PM
இந்தியா பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவது மட்டுமல்லாமல், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நிலத்திலேயே பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை நடத்தவும் தயங்காது என, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்தார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் 77-வது பயிற்சி வகுப்புகள் அதிகாரிகளுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (ஆக. 29) பங்கேற்றார்.
அப்போது, அவர் அதிகாரிகள் மத்தியில் பேசும்போது, "இந்திய நாட்டின் எல்லைகளில் சவால்கள் நிறைந்திருந்தாலும், நாட்டின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் இருக்காது என நாட்டு மக்கள் நம்புகின்றனர்.
நமது அண்டை நாளில் ஒன்று இரண்டு போர்களில் தோற்ற நிலையில், மறைமுகமான யுத்தத்தை தொடுத்து வருகிறது. பயங்கரவாதம் அதன் கொள்கையின் ஒரு அங்கமாகிவிட்டது.
பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள், நிதி மற்றும் பயிற்சி அளிப்பதன் மூலம் இந்தியாவை குறிவைக்கத் தொடங்கியுள்ளது.
இன்று இரு நாடுகளிடையே போர்நிறுத்தம் வெற்றிகரமாக உள்ளது என்றால், அதற்கு நமது பலம் தான் காரணம்.
2016-ல் எல்லை தாண்டிய தாக்குதல்கள் நமது மனநிலையை மாற்றியது. நாம் முன்னெச்சரிக்கையாக செயல்பட தொடங்கினோம். இது 2019-ல் பாலகோட் வான்வழித் தாக்குதலால் மேலும் வலுவடைந்தது.
பாதுகாப்புத்துறையில் சுய சார்பு என்பது நீண்ட யாத்திரை. பாதுகாப்புத்துறையில் சுயசார்பு அடைவது மட்டுமல்லாமல், சர்வதேச ஏற்றுமதியாளராக மாற வேண்டும்.
இந்த பயற்சியில் பங்கேற்றுள்ள அனைத்து நாடுகளின் அதிகாரிகள், தாங்கள் கற்றதை தங்கள் நாட்டிலும் செயல்படுத்த வேண்டும். பயிற்சியில் பங்கேற்றுள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் வாழ்த்துக்கள்" என்றார்.
பின்னர், அதிகாரிகளின் கேள்விகளுக்கு ராஜ்நாத் சிங் பதிலளித்ததாவது:
"சைபர் குற்றங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறைகளுக்கு பெரும் சவாலானவை. இதை எதிர்கொள்ள பாதுகாப்புத்துறையில் செயற்கை நுண்ணறிவு கவுன்சில் உருவாக்கப்பட்டுள்ளது. சைபர் சவால்களை சமாளிக்க டிபன்ஸ் சைபர் ஏஜென்சி உள்ளது. இவற்றின் மூலம் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து செயலாற்றி வருகிறது.
பாதுகாப்புத்துறையில் சுய சார்பு இன்றியமையாதது. நாம் பிற நாடுகளை நம்பியிருக்க முடியாது. சுயசார்பு காரணமாக வேலைவாய்ப்புகள் பெருகும். பாதுகாப்புத்துறையில் 74 சதவீதம் அந்நிய முதலீடுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தனியார் பங்களிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.
பிற நாடுகளுடனும் இணைந்து செயலாற்றுகிறோம். அவர்களை இந்தியாவில் வந்து உற்பத்தியை தொடங்க வலியுறுத்துகிறோம். இதன் மூலம், அந்த தொழில்நுட்பம் இந்தியாவுக்கு கிடைக்கும்.
விக்ராந்த் விமானதாங்கி கப்பல் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது. இது வரலாற்று முன்னெடுப்பாகும். தொடர்ந்து இத்தகைய தயாரிப்பு உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும்.
இந்தியா அண்டை நாடுகளுடன் நல்லுறவு மற்றும் அமைதியை விரும்புகிறது. நாட்டின் பாதுகாப்பு தான் நமது முன்னுரிமை. வங்கதேசம், நேபாளம், பூடான், இலங்கை ஆகிய நாடுகளுடன் இரு நாடுகளும் எல்லை, பயங்கரவாதம் விவகாரங்களில் இணைந்து பணியாற்றுகிறோம். மியான்மர் நாடுடன் போதை மருந்து கடத்தலை தடுக்க எல்லையில் இரு நாடுகளின் ராணுவங்களும் பணியாற்றுகின்றன".
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், அதிகாரி ஒருவர், "பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறைக்கு ஆண்டுதோறும் 0.4 சதவீதம் நிதி குறைக்கப்படுகிறது" என கேட்டதற்கு, எனக்கே இது குறித்து தற்போது தான் தெரிகிறது. நிதியமைச்சர் மற்றும் பிரதமரை சந்தித்து இது குறித்து முறையிடுவேன் என்றார்.
இந்த நிகழ்ச்சியில், இந்திய ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம்.நரவாணே, முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரி கமாண்டென்ட் லெப். ஜெனரல் எம்ஜேஎஸ் கலோன், பயிற்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT