Published : 29 Aug 2021 03:13 AM
Last Updated : 29 Aug 2021 03:13 AM
வீட்டிற்கு வந்து கணக்கீடு செய்யாமலேயே, மின் பயன்பாட்டுக் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், உளுந்தூர்பேட்டை மின்பகிர்மானக் கழகத்திற்குட்ட பகுதிகளில் மின் கட்டணம் மிகையாக உள்ளதாக பயனீட்டாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
உளுந்தூர்பேட்டையில் வசிப்பவர்களுக்கு கடந்த ஜூன், ஜீலை மாதங்களுக்கான மின் பயன்பாட்டுக் கட்டணத்தை குறிப்பிட்டு, அவரவர் செல்போன்களுக்கு குறுஞ்செய்திகள் வந்துள்ளன. அதில், சிலருக்கு வழக்கமாக செலுத்தும் கட்டணத்தை விட6 மடங்கு வரை கூடுதலாக வந்து,அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இன்னும் சிலருக்கு 2 முதல் 3 மடங்கு வரை கட்டணம் கூடுதலாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட பயனீட்டாளர்களின் இணைப்பில் நேரில் வந்துமின் கணக்கீடு செய்யப்படாத நிலையில், அதிகப்படியாக இந்தகட்டணம் வந்துள்ளது. இதையடுத்து மின் பயன்பாட்டாளர்கள் உளுந்தூர்பேட்டை மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று இதுதொடர்பாக கேட்டுள்ளனர். ‘மீட்டர் ரீடிங் எடுக்காமலேயே எப்படி இவ்வளவு கூடுதலாக கணக்கீடு செய்துள்ளீர்கள்?’ என்று கேட்டு வருகின்றனர். அதற்கு மின் வாரிய அலுவலகத்தினர், “ஏற்கெனவே உள்ள உங்களது பயன்பாட்டு அளவை வைத்து தான், தற்போது பில் போடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக எலவ னாசூர்கோட்டையைச் சேர்ந்த அன்பரசன் என்பவர் கூறுகையில், “நான் வீட்டு இணைப்பு பெற்றுள்ளேன், சராசரியாக ஆயிரம் ரூபாய் வரை செலுத்தி வருகிறேன். தற்போது ரூ.6 ஆயிரம் செலுத்த வேண்டும் என குறுஞ்செய்தி வந்துள்ளது. இதுபற்றி நேரில் சென்று கேட்டதற்கு கரோனா காலத்தில் வீடுகளுக்குச் சென்று ரீடிங் எடுக்கவில்லை. எனவே அதைச் சேர்த்து தற்போது வசூலிக்கிறோம் என்கின்றனர்.
கரோனா காலத்தில், அரசின் உத்தரவின் படி எனது வீட்டில், நானே ரீடிங் பார்த்து, அதன்படி நானே நேரில் சென்று ஆயிரம் ரூபாய் கட்டணமாகச் செலுத்தியிருக்கும் சூழலில், தற்போது அதை விட, கூடுதலாக மிகையான கட்டணம் செலுத்த வலியுறுத்துகின்றனர்” என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
இதேபோன்று, வணிக மின் இணைப்பு பெற்றுள்ள சண்முகம் என்பவர் சராசரியாக ரூ.2,500 செலுத்தி வந்தார். தற்போது அவருக்கு ரூ.6,400 மின் கட்டணமாக வந்துள்ளதாக வருத்தம் தெரிவிக்கிறார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற விவசாயக் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்ட கணையார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜெயராமன் என்பவர், “100 யூனிட் இலவச மின்சாரம் போக அதிகப்படியாக ரூ.50 அல்லது ரூ.100 மட்டுமே செலுத்தி வந்த நிலையில், தற்போது எனக்கு ரூ.600 செலுத்தச் சொல்லி ரசீது வந்துள்ளது. இந்தக் கட்டண குளறுபடியை ஆராய வேண்டும்” என்று முறையிட்டார்.
மின்வாரிய அதிகாரி விளக்கம்
இந்தச் சிக்கல் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட மின்பகிர்மானக் கழக கண்காணிப்பு பொறியாளர் அருட்பெருஞ்ஜோதியிடம் கேட்டபோது, “கரோனா காலத்தில் வீடுகளுக்குச் சென்று மின் கணக்கீடு செய்யவில்லை.
அதன் காரணமாக மின் பயன்பாட்டுக் கட்டண நிலைகளின் வேறுபாடு காரணமாக கட்டணம் மிகையாக வந்துள்ளது.
ஏற்கெனவே பயன்படுத்திய மின் அளவைக் கொண்டு, கட்டணத்தை திருத்தி வசூலிக்க மின்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
மின் கட்டண நிலைகளை மாற்றி கட்டணம் வசூலிக்க, அனைத்து மின்வாரிய அலுவலகங்களுக்கும் உத்தரவிட்டுள்ளோம்.
எனவே பயன்பாட்டாளர்கள் ஏற்கெனவே செலுத்திய மின் அளவு பயன்பாட்டுக் கட்டண விவரங்களோடு மின்வாரிய அலுவலகங்களுக்குச் சென்று விலக்கு கட்டண விவரங்களைப் பெற்று, குறைத்து செலுத்தலாம்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT