Published : 29 Aug 2021 03:13 AM
Last Updated : 29 Aug 2021 03:13 AM
கடந்த சில ஆண்டுகளில் கழிவு நீர் குட்டையாகிப் போன விருத்தாசலம் மணிமுக்தாறு, மேலும் மேலும் மோசமான நிலையை நோக்கிச் செல்லத் தொடங்கியிருக்கிறது. மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு, மணிமுக்தாற்றைச் சுற்றிலும் துர்நாற்றம் வீசிக்கொண்டிருக்கிறது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வழியாக மணிமுக்தா ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் ஒருபுறத்தில் விருத்தகிரீஸ்வரர் கோயிலும் கிழக்குப் புறத்தில் வணிக வளாகங்களும் உள்ளன. இந்த ஆற்றின் சுற்று வட்டாரப் பகுதியில் விருத்தாசலம் ஜங்ஷன் சாலை மற்றும் கடைவீதி பகுதியில் 25-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் செயல்படுகின்றன. இதுதவிர சேலம் சாலையிலும் தனியார் மருத்துவமனைகள் செயல்படுகின்றன.
இந்த மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை நிர்வாகத்தினர், மருத்துவ திரவக் கழிவுகளை சிறுசிறு ஓடைகள் மூலம் ஆற்றில் கலக்கச் செய்கின்றனர். அதேபோன்று திடக் கழிவுகளையும் சாக்குப் பைகளில் மூட்டையாக் கட்டி ஆற்றில் வீசிவிட்டுச் செல்கின்றனர்.
தற்போது ஆற்றில் தண்ணீர் செல்லாததால் மருத்துவக் கழிவுகள் ஆற்றிலே தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது. ஆற்றைக் கடந்து செல்வோர் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.மேய்ச்சலுக்குச் செல்லும் கால்நடைகளும், தாகத்திற்ககாக ஆற்றில் தேங்கியிருக்கும் கழிவுநீரை பருகி வருகின்றன. இதனால் கால்நடைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
ஆற்றில் வெள்ளம் வரும்போது, ஏற்கெனவே தேங்கி, அழுகி, மட்கியிருந்த திடக்கழிவுகள் அடித்துச் செல்லப்பட்டு, அருகில் உள்ள ஏரி, குளம், குட்டைகளில் சென்று விழுகின்றன. அதனாலும் நீர்நிலைகள் சீர்கேடு அடைகின்றன.
ஏற்கெனவே விருத்தாசலம் நகர்புற சாக்கடை கழிவுகளில் பாதிக்கும் மேல் மணிமுக்தாற்றில் கலந்து பெரும் சுற்றுப்புறச் சூழல் சீர்கேட்டை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. தற்போது இந்த மருத்துவக் கழிவுகளும் சேர்ந்து மேலும் ஆற்றை மோசமான நிலைக்கு தள்ளியிருக்கிறது.
‘காசியில் மூழ்கினால் கிடைக்கும் புண்ணியத்தை விட, மணிமுக்தாற்றில் மூழ்கி, விருத்தகிரீஸ்வரை வணங்கினால் கிடைக்கும் புண்ணியம் அதிகம்’ என்று விருத்தாசலம் ஊர்வாசிகள் அவ்வபோது தங்கள் ஊர் குறித்து சிலாகித்துப் பேசுவதுண்டு. அந்த ஆற்றின் அருமை பெருமை பற்றி அவர்கள் சொன்னதெல்லாம், அந்த ஆற்றைப் போலவே பாழாய்ப் போன பழங்கதையாகி விட்டது.
நகரின் நல்லதொரு அடையாளமாக திகழ்ந்த மணிமுக்தாறு இப்படி சீர்கெட்டுப் போவதைக் கண்டு நகர மக்கள் பொறுமுகின்றனர். நகராட்சி நிர்வாகத்தில் விருத்தாசலம் ஊர்வாசிகள் இதுபற்றி பலமுறை முறையிட்டும் பயனேதும் இல்லை. அவ்வபோது ஊர்நலன் விரும்பிகள் ஆவேசப்பட்டு, சாலை மறியல் செய்வதும், அவர்களை போலீஸார் வந்து ஆசுவாசப்படுத்துவதும் தொடர்கிறது.
நகராட்சி நிர்வாகமும், நீர்வளத்துறையினரும் இணைந்து தனியார் மருத்துவமனை நிர்வாகங்களுக்கு மருத்துவக் கழிவுகள் அகற்றம் தொடர்பாக கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை எடுத்துக் கூற வேண்டும். அதை முறையாக கடைபிடிக்காவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரின் கழிவு நீரை ஆற்றுக்குள் திருப்பி விடாமல் முறையாக அப்புறப்படுத்த வேண்டும். என்பதே விருத்தாசலம் நகர மக்களின் கோரிக்கையாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT