Published : 28 Aug 2021 09:06 PM
Last Updated : 28 Aug 2021 09:06 PM
கோவை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்தால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த சில வாரங்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதைத் தொடர்ந்து கேரளா எல்லையை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் உள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்புப் பணியை, அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினர் தீவிரப்படுத்தினர்.
அதன்படி, கேரளா எல்லையை ஒட்டி அமைந்துள்ள தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் ஒன்றான கோவையில் எல்லையோர சோதனைச் சாவடிகள் பலப்படுத்தப்பட்டு கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்வதற்கு 6 வழித்தடங்கள் இருந்தாலும், வாளையாறு சோதனைச்சாவடி வழித்தடம் பிரதானமானதாகும். இந்த சாலை வழியாக தினசரி ஏராளான வாகன ஓட்டுநர்கள் கேரளாவில் இருந்து கோவைக்கும், கோவையில் இருந்து கேரளாவுக்கும் சென்று வருகின்றனர்.
ஆட்சியர் ஆய்வு
கேரளாவில் தொற்று பரவல் அதிகரித்தால், கோவையில் உள்ள சோதனைச் சாவடிகள் கண்காணிப்புகள் பலப்படுத்தப்பட்டது. கேரளாவில் இருந்து வருபவர்கள் இ-பாஸ், கரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது இரு தவணை கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று ஆகியவற்றை கட்டாயம் எடுத்து வர வேண்டும், இல்லையெனில் திரும்ப அனுப்பப்படுவர் என மாவட்ட நிர்வாகத்தால் எச்சரிக்கப்பட்டது. இப்பணியை சில வாரங்களுக்கு முன்னர் அமைச்சர்களும், ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளும் நேரடியாக ஆய்வு செய்தனர். சோதனைச் சாவடியில் சுகாதாரத்துறையினர், வருவாய்த்துறையினர், காவல்துறையினர், உள்ளாட்சித்துறையினர் இணைந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஓணம் பண்டிகைக்கு பின்னர், கேரளாவில் கரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியது. ஒருநாளில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்தை தாண்டியது.
கேரளாவில் தொற்று மீண்டும் அதிகரிப்பதைத் தொடர்ந்து, வாளையாறு உள்ளிட்ட கேரளா எல்லையை ஒட்டியுள்ள சோதனைச்சாவடிகளில் கண்காணிப்புப் பணியை மாவட்ட நிர்வாகத்தினர் தீவிரப்படுத்தியுள்ளனர். வாளையாறு சோதனைச் சாவடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்புப் பணியை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் இன்று (ஆக.28) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கட்டுப்பாடு விதிக்கும் வாய்ப்பு
பின்னர், ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் செய்தியாளர்களிடம் கூறும்போது,‘‘ கேரளாவில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், வாளையாறு சோதனைச் சாவடியில் மீண்டும் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோவையில் இருந்து கேரளாவுக்கு தினமும் பணிநிமித்தம் சென்று வருபவர்களுக்கு சிறப்பு தடுப்பூசி வழங்கும் முகாம் நடத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களில் மட்டும் ஒரு லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் கடந்த 4 நாட்களில் தொற்று விகிதம் லேசாக உயர்ந்துள்ளது. இது அதிகரிக்காமல் தடுக்க தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாவட்டத்தில் தொற்று அதிகரிக்கும் நிலை தொடர்ந்தால், புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதால், கேரளாவில் இருந்து கோவைக்கு வரும் கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி அனுப்ப பாலக்காடு, மலப்புரம் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 22.20 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் 71 சதவீதம் அரசு சார்பிலும், 1.69 லட்சம் தனியார் மருத்துவமனைகள் சார்பிலும், 2.16 லட்சம் தடுப்பூசிக் தொழிற்சாலைகள் மூலமும், 18 ஆயிரம் தடுப்பூசிகள் பல்வேறு நிறுவனங்களில் சி.எஸ்.ஆர் நிதி பங்களிப்புடனும் வழங்கப்பட்டுள்ளது,’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT