Published : 28 Aug 2021 06:37 PM
Last Updated : 28 Aug 2021 06:37 PM
பெருநகர சென்னை மாநகராட்சியில் கட்டிட அனுமதி பெறுவது தொடர்பான புகார்களை 1913 என்ற தொலைபேசி எண்ணிலும், 94451 90748 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் தெரிவிக்கலாம் என, சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று (ஆக. 28) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"பெருநகர சென்னை மாநகராட்சியில் கட்டிட அனுமதி பெற கட்டிட உரிமையாளர்கள் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் (Standing Operating Procedure) www.chennaicorporation.gov.in என்ற மாநகராட்சியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 5,000 முதல் 10,000 சதுர அடிக்குள் உள்ள குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடங்களுக்கு தலைமைப் பொறியாளரால் (நகரமைப்பு) அனுமதி அளிக்கப்படுகிறது. 10,000 சதுர அடிக்கு மேல் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் மூலம் திட்ட அனுமதி அளிக்கப்பட்டு, கட்டிட அனுமதி பெறுவதற்கு பெருநகர சென்னை மாநகராட்சிக்கு அனுப்பப்படுகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் பெறப்பட்ட கட்டிட அனுமதிக்கான விண்ணப்பத்தின் மீது அலுவலர்களால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, உரிய கட்டணம் செலுத்துவதற்கான கேட்பு ரசீது அளிக்கப்படுகிறது. மேற்படி கேட்பு ரசீதினை விண்ணப்பதாரர் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கட்டணத் தொகையை இணையதளத்தில் அல்லது கேட்பு வரைவோலை முறையில் செலுத்தியதும் இணையதளத்தில் கட்டிட அனுமதி அளிக்கப்படுகிறது.
முறையாக விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்குள் இணையதளம் வழியாக வெளிப்படைத் தன்மையுடன் கட்டிட அனுமதி அளிக்கப்படுகிறது. மண்டலம் 1 முதல் 15 வரை உள்ள பகுதிகளில் 5,000 சதுர அடி மற்றும் அதற்கு கீழ் உள்ள கட்டிடங்களுக்கு இணையதளம் வழியாக பெறப்பட்ட விண்ணப்பங்களின் பேரில் 30 நாட்களில் சம்பந்தப்பட்ட மண்டல செயற்பொறியாளர் அவர்களால் கட்டிட அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும், நிலுவையிலுள்ள மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டு கட்டிட அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த ஒரு மாதத்தில் தகுந்த ஆவணங்களுடன் சென்னை மாநகராட்சி மண்டலங்களில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தலைமையிடத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு கட்டிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மாநகராட்சியின் இணையதளம் வழியாக உரிய வழிகாட்டுதலின்படி தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கப்படும் அனைத்து விண்ணப்பங்களையும் உடனடியாக பரிசீலினை செய்து கட்டிட அனுமதி வழங்க பெருநகர சென்னை மாநகராட்சி அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. மேலும், பொதுமக்கள் இதுகுறித்து புகார் தெரிவிக்க விரும்பினால், மாநகராட்சியின் 1913 என்ற தொலைபேசி எண்ணிலும், 94451 90748 என்ற விழிப்பு அலுவலரின் வாட்ஸ் ஆப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது".
இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT