Published : 28 Aug 2021 06:14 PM
Last Updated : 28 Aug 2021 06:14 PM
புதுச்சேரி அருகே இரு கிராம மீனவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் நடுக்கடலில் மோதலில் ஈடுபட்டனர். போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி, கூட்டத்தைக் கலைத்தனர்.
புதுச்சேரி வீராம்பட்டினம் பகுதி மீனவர்களுக்கும், அதை ஒட்டிய நல்லவாடு பகுதி மீனவர்களுக்கும் இடையே தடை செய்யப்பட்ட சுருக்கு வலை விவகாரம் தொடர்பாக அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (ஆக.28) வீராம்பட்டினம் மற்றும் நல்லவாடு மீனவர்கள் நடுக்கடலில் அருகருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, மீண்டும் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதில் படகிலிருந்தபடி கற்களை வீசித் தாக்கிக் கொண்டதில் 2 மீனவர்கள் காயமடைந்தனர். தகவலறிந்து இரு கிராம மீனவர்களும் சுளுக்கி, அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் படகு மூலமும், கடற்கரை வழியாக நடந்தும் சென்றனர்.
இரு கிராம கடற்கரையிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர். இதனால் பதற்றம் அதிகரித்தது. தகவலறிந்து புதுக்குப்பம் பகுதியில் எஸ்பி ஜிந்தா கோதண்டராமன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீஸாரும், வீராம்பட்டினம் பகுதியில் எஸ்.பி.ரங்கநாதன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீஸாரும் அங்கு குவிக்கப்பட்டனர்.
இதையடுத்து மோதல் நடைபெற்ற பகுதிக்கு விரைந்து சென்ற போலீஸார், அனைவரையும் கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். ஆனால் அவர்கள் மறுத்த நிலையில் வானத்தை நோக்கி ஒரு முறை துப்பாக்கியால் சுட்டனர். இதனால் கூட்டம் சிதறி ஓடியது.
இதனையடுத்து பெரிய அளவில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வகையில் நிலைமையை கட்டுக்கள் கொண்டு வந்தனர். இதனிடையே புதுச்சேரி சீனியர் எஸ்.பி. பிரதிக்ஷா கொடாரா சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். இரு கிராம மீனவர்களுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடிக்கலாம் என்பதால் நல்லவாடு, புதுக்குப்பம், சின்ன வீராம்பட்டினம், வீராம்பட்டினம் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நல்லவாடு கிராமத்தில் ஒரு பகுதி புதுச்சேரி, ஒரு பகுதி தமிழ்நாடு என்பதால் அங்கு தமிழக போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் ரோந்து வருவதுடன், கலவரத்தை ஒடுக்கும் வகையில் போலீஸ் வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT