Published : 28 Aug 2021 06:13 PM
Last Updated : 28 Aug 2021 06:13 PM
செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதால் மாநகராட்சி இளங்கோவன் மேல்நிலைப்பள்ளியில் 24 மணி நேரமும் செயல்பட்டு வந்த மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் கரோனா தடுப்பூசி மையம், அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்திற்கு இடமாற்றம் செய்யப்படுகிறது.
மதுரையில் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது முதல் அரசு ராஜாஜி மருத்துவமனை தடுப்பூசி மையம், அதன் அருகில் உள்ள மாநகராட்சி இளங்கோவன் மேல்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வந்தது. அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் அதன் பெரும்பாலான வார்டுகள் முதல் அலை உருவான காலம் முதலே கரோனா வார்டுகளாக மாற்றம் செய்து சிகிச்சை வழங்கப்பட்டது.
அதனால் அதே இடத்தில் தடுப்பூசி மையம் அமைத்தால் அங்கு தடுப்பூசி போட வருவோருக்கு கரோனா தொற்று ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டது. அதனால், அரசு ராஜாஜி மருத்துவமனை அருகே உள்ள மாநகராட்சி இளங்கோவன் பள்ளியில் தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டது. அங்கு தினசரி 1,800 பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டது. கடந்த மாதம், தமிழகத்திலேயே முதல் முறையாக ஒரே தடுப்பூசி மையத்திலே ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது இந்த மாநகராட்சி இளங்கோவன் மேல்நிலைப்பள்ளி தடுப்பூசி மையத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது மதுரையிலே 24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி மையமாக மாநகராட்சி இளங்கோவன் மேல்நிலைப்பள்ளி தடுப்பூசி மையம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த தடுப்பூசி மையம், பனங்கல் சாலையில் 24 மணி நேரமும் டவுன் பஸ் வசதி செயல்படும் இடம் என்பதோடு மக்கள் நடமாட்டமும் அதிகமாக இருப்பதால் மக்களும் எளிதாகத் தடுப்பூசி போட்டு வந்தனர்.
ஆனால், வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதால் மாநகராட்சி இளங்கோவன் மேல்நிலைப் பள்ளியில் தடுப்பூசி மையம் செயல்பட முடியாது. அதனால், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அருகே உள்ள மதுரை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்திற்கு தடுப்பூசி மையத்தை மாற்றுவதற்கு ஏற்பாடுகள் தொடங்கியிருக்கின்றன. தடுப்பூசிகளைச் சேமித்து வைக்கும் குளிர்பதன அமைப்புகள், தடுப்பூசி போடுவார் விவரங்களைப் பதிவு செய்வதற்கான கணினிகளையும் இடமாற்றம் செய்ய வேண்டும். இப்பணிகள் விரைவில் பணிகள் தொடங்கப்படுகின்றன.
இதுகுறித்து டீன் ரத்தினவேலுவிடம் கேட்டபோது, ‘‘செப்டம்பர் 1 முதல் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்திற்கு மாவட்ட ஆட்சியர் சாலையில் செல்லும் வழிப்பாதை பகுதியில் உள்ள கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்துள்ளோம். ஆனால், இடமாற்றம் 1-ம் தேதியா அல்லது பள்ளி தொடங்கி ஓரிரு நாள் கழித்தா என்பதை விரைவில் தெரிவிப்போம்’’ என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT