Published : 28 Aug 2021 05:24 PM
Last Updated : 28 Aug 2021 05:24 PM

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: வழக்கறிஞருக்கு ஒரு மாத சிறை தண்டனை: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்

சென்னை

நீதித்துறை சாராதவர்கள் மட்டுமல்லாமல், நீதித்துறையில் இருப்பவர்களும், நீதிமன்றத்தின் மீது கல் எறிந்து இருப்பதாக வேதனை தெரிவித்த உயர் நீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழக்கறிஞர் ஒருவருக்கு ஒரு மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற விஜிலென்ஸ் பதிவாளராக இருந்த பூர்ணிமா, மேல்நிலை வகுப்பு படிக்காமல் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பும், பின்னர் மைசூருவில் சட்டப்படிப்பும் முடித்து, நீதித்துறை பணியில் சேர்ந்திருப்பதாகவும், அவரை பதவி நீக்கம் செய்ய கோரி, வழக்கறிஞர் சதீஷ்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது, பதிவாளர் பூர்ணிமா, பள்ளிப்படிப்பை முடித்துள்ளதற்கான ஆதாரங்களை சுட்டிக்காட்டி, நீதித்துறைக்கு களங்கம் கற்பிக்கும் விதமாக வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறி சதீஷ்குமாருக்கு 5 லட்ச ரூபாய் அபராதம் விதித்து, மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், சதீஷ்குமார் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எடுக்க உத்தரவிட்டது.

இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இது குறித்து விசாரித்து அறிக்கை தாக்க செய்ய, உயர் நீதிமன்ற சிறப்பு பணி அதிகாரி கணபதிசாமி மற்றும் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் நாகஜோதி ஆகியோரை நியமித்து உத்தரவிட்டது.

இதற்கிடையில், வழக்கறிஞர் சதீஷ்குமார் தனது மூத்த வழக்கறிஞர், வாசுதேவன் அறிவுறுத்தலின் படியே வழக்கு தொடர்ந்ததாக பதில் மனு தாக்கல் செய்தார்.

கணபதிசாமி மற்றும் நாகஜோதி அளித்த அறிக்கையை தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஆர்.என்.மஞ்சுளா அடங்கிய அமர்வு, பதிவாளர் பூர்ணிமாவுக்கு எதிராக ஓய்வுபெற்ற நீதித்துறை நீதிபதி மற்றும் நீதித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாக சுட்டிகாட்டினர்.

நீதித்துறை சாராதவர்கள் மட்டுமல்லாமல் நீதித்துறையில் இருப்பவர்களும், இந்நீதிமன்றத்தின் மீது கல் எறிந்து இருப்பதாக வேதனை தெரிவித்த நீதிபதிகள், வழக்கறிஞர்கள் சதீஷ்குமார் மற்றும் வாசுதேவன் இருவரும் நீதிமன்ற அவமதிப்பு குற்றம் புரிந்துள்ளது நிரூபணமாகியுள்ளதாக தீர்ப்பளித்தனர்.

நடந்த சம்பவத்துக்கு சதீஷ்குமார் மன்னிப்பு கோரியுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் அவருக்கு 6 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்ததுடன் அவர் மீண்டும் வழக்கறிஞராக பணிபுரிய அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.

அதே சமயம் மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்காத வாசுதேவனுக்கு 1 மாத சிறை தண்டனை மற்றும் 6 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும், 1 ஆண்டு வழக்கறிஞர் பணிபுரிய தடை விதித்தும் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x