Published : 28 Aug 2021 03:15 AM
Last Updated : 28 Aug 2021 03:15 AM
திருச்சி காந்தி மார்க்கெட் பின்புறம் உள்ள மீன் மார்க்கெட்டுக்கு ரூ.13 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதனால், அங்குள்ள மீன் மற்றும் இறைச்சிக் கடைகள் ஓரிரு நாட்களில் தற்காலிகமாக இடம் மாறவுள்ளன.
காந்தி மார்க்கெட் பின்புறம் தர்பார் மேடு பகுதியில் உள்ள மீன் மார்க்கெட் வளாகத்தில் 50-க்கும் அதிகமான மீன் கடைகள் மற்றும் கோழி, ஆடு இறைச்சிக் கடைகள், பழக்கடைகள் உட்பட பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றன.
அங்கு போதிய இட வசதி இல்லாததால் இந்த மீன் மார்க் கெட் வளாகம் எப்போதும் கூட்டமாக இருக்கும். இங்கு வருபவர்கள் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்திச் செல்வதால், அப்பகுதியில் எந்த நேரமும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். மேலும், இந்த மீன் மார்க்கெட் வளாகம் பல ஆண்டு களாக பராமரிப்பு செய்யப்பட வில்லை.
இதையடுத்து, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.13 கோடி மதிப்பில், 100-க்கும் அதிகமான இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதியுடன், தரை மற்றும் முதல் தளத்தில் 150 கடைகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்ட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இந்தப் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ள நிலையில், இப்போது மீன் மார்க்கெட் வளாகத்தில் செயல்பட்டு வரும் அனைத்துக் கடைகளையும் தற்காலிகமாக வேறு இடத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
காந்தி மார்க்கெட் மீன் மார்க் கெட்டுக்கு புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளதால், இங்குள்ள மீன் கடைகள் அனைத்தும் டைமண்ட் பஜாருக்கும், கோழி மற்றும் ஆடு இறைச்சிக் கடைகள் காந்தி மார்க்கெட் பின்புறம் உள்ள ஆடு வதைக் கூட வளாகத்துக்கும், பழக் கடைகள் உள்ளிட்ட பிற கடைகள் கீழப்புலிவார்டு சாலையில் உள்ள மேல்நிலைக் குடிநீர்த் தொட்டி வளாகத்துக்கும் ஓரிரு நாட்களில் இடமாற்றம் செய்யப்படவுள்ளன.
புதிய கட்டிடத்தின் தரைத் தளத்தில் விற்பனைக் கடைகளும், முதல் தளத்தில் விற்பனைக் கடைகள் மற்றும் குளிர்பதன வசதியும் ஏற்படுத்தப்படவுள்ளன. கடைகள் அனைத்தும் இட மாற்றம் செய்யப்பட்ட உடன் புதிய கட்டிடம் கட்டும் பணிகளைத் தொடங்கி, 2 ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.
புதிய கட்டிடம் கட்டும் பணிகளைத் தொடங்கி, 2 ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT