Published : 26 Feb 2016 06:20 PM
Last Updated : 26 Feb 2016 06:20 PM
கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்களுக்கு நேற்று முன்தினம் நேர்காணல் நடத்தப் பட்டது. 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட 220 விண்ணப்பம் வந்திருந்தது. நேர்காணலில் 167 பேர் கலந்து கொண்டனர்.
இவர்களில் போட்டியிட யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்? தமாகா பிரிந்து சென்றுவிட்ட நிலையில், குமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி தனது இருப்பை தக்க வைக்குமா என கேள்வி எழுந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் காங் கிரஸ் கட்சிக்கு வலுவான வாக்கு வங்கி உள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது தமிழகம் முழுவதும் ஈழத் தமிழர் விவகாரம் கொழுந்துவிட்டு எரிந்தது. அந்த சூழ்நிலையிலும் கன்னியா குமரி மாவட்டத்தில் குளச்சல், கிள்ளியூர், விளவங்கோடு ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
இதில், கிள்ளியூர் எம்.எல்.ஏவாக உள்ள ஜான் ஜேக்கப் தமாகா கட்சிக்கு சென்றுவிட்டார். காங்கிரஸ் கட்சியில் இருந்து தமாகா உதயமாகியுள்ள சூழலில், இந்த தேர்தலில் குமரி மாவட்டத்தில் தனது இருப்பை உறுதி செய்ய வேண்டிய சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சி உள்ளது.
இந்நிலையில், தற்போது திமுக - காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டுள்ள நிலையில், இரு கட்சிகளின் வாக்கு வங்கிகள் தங்களுக்கு வெற்றிவாய்ப்பைத் தரும் என காங்கிரஸ் கட்சியினர் நம்பிக்கையுடன் உள்ளனர். அதிலும், தற்போது காங்கிரஸின் கையில் உள்ள 3 தொகுதிகளிலும், மீண்டும் அக்கட்சி சார்பில் போட்டியிட பலரும் மும்முரம் காட்டுகின்றனர்.
குளச்சல் தொகுதி
குளச்சல் தொகுதிக்கு தற்போதைய எம்எல்ஏ பிரின்ஸ், கிழக்கு மாவட்டத் தலைவர் பாலையா, மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜான் சவுந்தர் உள்ளிட்ட ஏராளமானோர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.
வழக்கறிஞர் ஜான் சவுந்தர், தனது ராஜீவ் ரத்த தான இயக்கப் பணிகளும், மதுவுக்கு எதிரான பிரச்சாரமும் தனக்கு கைகொடுக்கும் என நினைக்கிறார். கிழக்கு மாவட்ட தலைவராக இருப்பதால் தனக்கு சீட் கிடைக்கும் என பாலையா நம்புகிறார்.
தற்போதைய எம்எல்ஏ என்ற முறையிலும், கடந்த 5 ஆண்டுகளில் சட்டப்பேரவையில் அதிக கேள்விகள் எழுப்பியவர் என்ற முறையிலும் தான் மீண்டும் களமிறக்கப்படுவோம் என்ற நம்பிக்கையுடன் பிரின்ஸ் வலம் வருகிறார்.
கிள்ளியூர் தொகுதி
கிள்ளியூர் தொகுதிக்கு மேற்கு மாவட்டத் தலைவர் அசோகன் சாலமன், முன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் சீட் கேட்கின்றனர். தொகுதி எம்எல்ஏ இப்போது தமாகாவுக்கு சென்று விட்டதால் இத்தொகுதியில் தனது பலத்தை நிரூபித்தே ஆக வேண்டிய நிலையில் காங்கிரஸ் கட்சி உள்ளது.
விளவங்கோடு தொகுதி
இத்தொகுதியில் தற்போதைய எம்எல்ஏ விஜயதரணி மீண்டும் சீட் கேட்டு நேர்காணலில் பங்கெடுத்தார். குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ் இத்தொகுதியையும் குறிவைத்து காய் நகர்த்துவதாக பேச்சு அடிபடுகிறது. ஆனால், விஜயதரணியின் ஆதரவாளர்களோ கட்சித் தலைமை மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கும் என்கின்றனர். இதில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்? காங்கிரஸ் கோட்டையான குமரி மாவட்டத்தை அக்கட்சி தக்கவைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT