Published : 27 Aug 2021 05:01 PM
Last Updated : 27 Aug 2021 05:01 PM

கோடநாடு வழக்கு; காவல்துறை மேல்விசாரணைக்குத் தடை கோரிய மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்

சென்னை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்குத் தொடர்பாக காவல்துறையின் மேல்விசாரணைக்குத் தடை கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், காவல்துறை சாட்சியாகச் சேர்க்கப்பட்டுள்ள கோவையைச் சேர்ந்த ரவி என்ற அனுபவ் ரவி என்பவர் தாக்கல் செய்த மனுவில், கோடநாடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மறைந்த கனகராஜ் என்பவரைத் தனக்குத் தெரியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த வழக்கில் மேல் விசாரணை நடத்த உள்ளதால், தங்கள் விருப்பப்படி வாக்குமூலம் அளிக்கும்படி, பல தரப்பில் இருந்தும் தனக்கு மிரட்டல்கள் வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அரசுத் தரப்பில் 41 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு முடித்த நிலையில், இதுவரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு சாட்சிகள் விசாரணை இன்னும் தொடங்கவில்லை எனவும், நீதிமன்ற அனுமதியின்றி மேல் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.

உயர் நீதிமன்ற உத்தரவின்படி, இந்த வழக்கை விரைந்து முடிக்கும்படி விசாரணை நீதிமன்றத்துக்கு உத்தரவிடுவதுடன், மேல் விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு ஆகஸ்ட் 24ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, அனுபவ் ரவி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஐ.சுப்ரமணியம் ஆஜராகி, சாட்சியங்கள் யாரிடமும் தெரிவிக்காமல், குற்றம் சாட்டப்பட்ட சிலரிடம் மட்டுமே தெரிவித்துவிட்டு, வழக்கை மேற்கொண்டு விசாரிப்பதாக, காவல்துறை நீலகிரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ததாகத் தெரிவித்தார். நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த மறுநாளே விசாரணைக்கு அழைத்ததாகவும் சுட்டிக்காட்டினார்.

மற்றொரு மூத்த வழக்கறிஞர் ஏ.எல்.சோமயாஜி ஆஜராகி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, குற்ற வழக்கின் விசாரணையே தொடங்கியபின் குற்றவாளியிடம் மறு விசாரணை நடத்த முடியாது எனவும், நீதிமன்றத்தின் அனுமதியின்றி சயானிடம் காவல்துறை மறு விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், அனுமதி பெற்றுதான் மறுவிசாரணை நடத்தப்படுகிறதென முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தவறான தகவலை அளித்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

தமிழக அரசுத் தரப்பில் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி, ஒரு குற்ற வழக்கில் தொடர்புடையவர்களை முழுமையாகக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டுமென்ற நோக்கில், விசாரணையை விரிவுபடுத்துவதற்காக நீலகிரி நீதிமன்றத்தில் காவல்துறை மெமோ தாக்கல் செய்யப்பட்டதாகவும், அது நிராகரிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிலர் விசாரணையை விரிவுபடுத்த வேண்டுமென நீதிபதியிடம் கடிதம் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

காவல்துறை தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் முகமது ஜின்னா ஆஜராகி, மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்துமே அனுமானத்தின் அடிப்படையில் கூறப்படுபவை எனச் சுட்டிக்காட்டினார். மனுதாரர் அனுபவ் ரவி காவல்துறை சாட்சியம் மட்டுமல்ல என்றும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் நெருக்கமானவர் எனவும் சுட்டிக்காட்டினார். காவல்துறை விரிவுபடுத்தப்பட்ட விசாரணையை நடத்தி நீதிமன்றத்தில்தான் அறிக்கை தாக்கல் செய்ய இருப்பதாகவும், அதைப் பொறுத்து நீதிமன்றம்தான் முடிவெடுக்கப் போவதாகவும் சுட்டிக்காட்டினார்.

வழக்கில் தொடர்புடையவர்கள் சிலர் மரணம், சிலர் விபத்துக்குள்ளானது போன்ற விஷயங்கள் முன்னர் முறையாக விசாரிக்கப்படவில்லை எனவும், தற்போது முழுமையாக விசாரிக்கப்படுகிறது எனவும் விளக்கம் அளித்தார். அந்த விசாரணைக்கு அழைத்தால், ஆஜராகி விளக்கம் அளிக்காமல், நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும், வேண்டுமானால் அவரது வழக்கறிஞர் துணையுடன் காவல் நிலையத்தில் ரவி ஆஜராகலாம் என்றும் விளக்கம் அளித்தார். கோடநாடு எஸ்டேட்டின் உரிமையாளரான நிறுவனத்தின் இயக்குநரையும் இதுவரை விசாரிக்கவில்லை எனக் குறிப்பிட்டார்.

அப்போது நீதிபதி குறுக்கிட்டு இவ்வாறு விசாரணையை விரிவுபடுத்திக்கொண்டே போனால், எப்போதுதான் நீலகிரி நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு விளக்கம் அளித்த அரசு தலைமை வழக்கறிஞர், தேவையில்லாமல் யாரையும் துன்புறுத்த வேண்டுமென்ற நோக்கம் இல்லை எனத் தெரிவித்ததுடன், விரிவுபடுத்தப்பட்ட விசாரணையை முடிக்க 8 வார கால அவகாசம் தேவைப்படும் எனத் தெரிவித்தார்.

இந்த வழக்கில் இன்று (ஆக. 27) தீர்ப்பளித்த நீதிபதி நிர்மல்குமார், வழக்கின் எந்தக் கட்டத்திலும் விசாரணையை விரிவுபடுத்த முடியும் எனவும், காவல்துறை விசாரணை என்பது, நீதிமன்ற வழக்கு விசாரணையைச் சற்று தாமதப்படுத்தினாலும், குற்றம் தொடர்பான உண்மையைக் கண்டறிவதில் உதவியாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தங்களுக்குக் கிடைத்த ஆதாரங்களையும், விவரங்களையும் வைத்துப் பாரபட்சமற்ற, நியாயமான நேர்மையான விசாரணையைத் தொடர காவல்துறைக்கு எவ்விதத் தடையும் இல்லை எனவும், காவல்துறை தாக்கல் செய்யும் ஆவணம் மற்றும் அறிக்கையை ஏற்பதா வேண்டாமா என விசாரணை நீதிமன்றம் முடிவு செய்யும் எனவும் தெளிவுபடுத்தியுள்ளார். அதனடிப்படையில், மேல்விசாரணைக்குத் தடை கோரி அபினவ் ரவி மனுத்தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x